Thursday, August 27, 2009

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!
28-08-2009
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை கொலைவெறி சிங்கள இராணுவம் மனிதாபிமானமே இல்லாமல் சுட்டுக்கொல்லும் படக்காட்சிகள் இப்பொழுது வெளிவந்துள்ள. பல வருடங்களாக இலங்கையில் இந்த அட்டூழியங்கள் நடந்து வருகின்றது என்று கூக்குரலிட்டு கூறி வந்தனர் ஈழத்தமிழர்களின் மீது பரிதாபப்பட்டவர்கள்; தமிழர்களை இன அழிப்பிலிருந்து காக்கவே நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் என்று வலியுறுத்தி புலிகள் கூறிய பொழுதும், உலக நாடுகளோ, தலைவர்களோ அதனை சட்டைக்கூட செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு கேடயமாக இருந்து அவர்களை காத்து வந்த புலிகளின் இராணுவ பலம் மழுங்கடிக்கப்பட்டப்பிறகு, சிங்கள வெறியர்கள் தங்களின் இன அழிப்பு அட்டூழியங்களை மீண்டும் விருப்பம் போல் மேற்கொள்கின்றனர். தமிழர்களின் காவல் அரணை தகர்த்து விட்டதால் இனி தமிழர்கள் சிங்களவர்களின் அடிமைகள் என்ற போக்கில்தான் செயல்படும் சிங்கள இனவெறி அரசும், இராணுவமும்.

தற்பொழுது மிக பரப்பரப்பாக பேசப்படும் இந்த படக்காட்சிகளைக்கண்டு, மலேசிய தமிழர்கள் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் ஈழத்து உடன்பிறப்புகளை எண்ணி மனம் வெதும்புகின்றனர். இந்த படக்காட்சிகள் வெட்ட வெளிச்சமாக்கியது, சிங்கள இராணுவ அட்டூழியத்தின் ஒரு பகுதி மட்டும்தான். போரால் பாதிக்கப்பட்டு, இன்று முள்வேலிக்குள் அகதிகள் என்ற பெயரில் சிறைக்கைதிகளாக வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. பசியாலும், பட்டினியாலும் படாதப்பாடுப் படுகின்றனர் அந்த தமிழர்கள். தமிழர்களுக்கெதிராக பல்வேறு வகை கொடுர செயல்கள் அகதிகள் முகாம் என்ற அந்த முள்வேலி சிறைக்குள் நிகழ்த்தப்படுகின்றன. பசியை தமிழர்களுக்கெதிரான வதை ஆயுதமாக சிங்கள இனவெறி அரசு பயன்படுத்துகிறது. அகதிகள் முகாமென்ற அந்த முள்வேலி சிறைக்குள் தமிழீழத்தின் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனர். பிச்சைக்காரர்களே இல்லாத சமூகமாக ஈழத்தமிழர்களை வைத்திருந்தார் பிரபாகரன், அவர்கள் இன்று ஒரு வேலை உணவுக்குக் கூட கையேந்தி நிற்கும் சமூகமாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். வாய்க்கிழிய மனிதாபிமானம் பேசும் உலக நாடுகளின் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டும் பாராமுகமாக இருப்பது ஏனோ? ஈழத்தில் மடிந்துக்கொண்டிருப்பது மனித இனம் அன்றோ?

ஏறக்குறைய 20 நாடுகளின் ஆதரவோடு புலிகளுக்கு எதிராக போரை முன்னெடுத்தது இலங்கை. புலிகளை வெல்கிறோம் என்றுக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாவதை தடுக்க, தங்களது ஆயுதங்களை மௌனப்படுத்தி, அஹிம்சை வழியில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய புலிகளின் தலைமை செயலர் பத்மநாபனையும் அனைத்துலக சட்ட விதிகளை மதிக்காமல் கடத்தியுள்ளது இலங்கை. நாடுக்கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முழுமுச்சாக பணியாற்றுகிறது இலங்கை இனவெறி அரசு. தமிழர்களின் குரலை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது இலங்கை. அமைதியான வழியில், தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய பத்மநாபன் மலேசிய தலைநகர், கோலாலம்பூர்ரில் வைத்துதான் கடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. பத்மநாபன் கைது தொடர்பாக மலேசியாவின் நெடுநீண்ட மௌனம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையா என்ற சந்தேகத்தை வலுக்க வைக்கின்றது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் எந்தவொரு நாட்டிலும் இதுப்போன்றதொரு அடிப்படை மனித உரிமையை மீறிய கடத்தல் சம்பவம் அனுமதிக்கப்படாது. பத்மநாபனை கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவியிருக்குமானால், அந்த சம்பவம் மலேசியாவில் வாழும் தமிழர்களை மதிக்காத செயலாகும். மலேசிய அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கும் முயற்சிகளை ஆதரித்து, அந்த தமிழர்களுக்கு உபத்திரவத்தை தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பக்காலம் தொடங்கி இலங்கையில் நடக்கும் மனித பேரவலங்களை தடுக்கக்கோரி மலேசியத்தமிழ்ர்களான நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலேசியத்தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக கண்டனக்கூட்டங்கள் வாயிலாகவும், பேரணிகள் வாயிலாகவும் தெரிவித்தோம். மலேசிய அமைச்சரைவையில் அமர்ந்துள்ள மஇகா அமைச்சர் இந்த விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்புவதாக உறுதியளித்திருந்தார். அப்படி இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் எழுப்பினாறேனில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதையும் அவர் அறிவிக்க வேண்டும். போஸ்னியா, கொசோவோ, சூடான் என உலகின் பல கண்டங்களிலும் நடக்கும் மனிதப்பேரவல விவகாரங்களில் முனைப்புடன் குரல் எழுப்பும் மலேசியா, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை ஒருமுறைக்கூட கண்டிக்காததன் மர்மம் என்ன? இலங்கை அரசின் இனவெறிப் போக்குக்கு மலேசிய அரசும் உடன்போகிறதா என்பதை உடனடியாக விளக்க வேண்டும்.


இலங்கையில் காலங்காலமாக தமிழர்கள் மிக மோசமாக நடத்துப்பட்டுதான் வந்துள்ளனர். ஜெயவர்த்தனே காலம் தொட்டு, இன்றைய மகிந்த இராஜபக்சே ஆட்சி வரை தமிழ் மக்களை சிங்களர்கள் இலங்கையின் குடிகளாக ஏற்றுக்கொண்டது கிடையாது. தங்களது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். ஈழ தமிழர்களின் இன்னலை நீக்கவே பல்வேறான போராளிக் குழுக்கள் இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் தோன்றின. கால ஓட்டத்தில் பல போராளிக்குழுக்கள் தங்களின் சுயநலனுக்காக கொள்கையை கைவிட்டு சிங்கள அரசுகளுடன் கைக்கோர்த்து பண சுகமும், பதவி சுகமும் கண்டன. ஈழத்தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இறுதிவரை போராடிய சுதந்திர அமைப்பை அழித்தொழிக்க உலகத்தின் பல்வேறு ஆதிக்க சக்திகளும் இனவெறி சிங்கள அரசுக்கு துணைபோயின.அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் வல்லரசுகளான இந்தியாவும்,சீனாவும் தெற்காசியாவில் தங்களின் இராணுவ பலத்தை பெருக்க போட்டிப்போட்டுக் கொண்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வாரி,வாரி வழங்கின. ஈழத்தமிழர்களின் காவல் அரணாக நின்ற புலிகளை சாய்ப்பதில் இந்தியா காட்டிய முனைப்பை சற்றும் எதிர்க்காமல், உலக தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களுக்கு இருந்த ஒரேயொரு காவல் அரனையும் தகர்த்து விட்டு இன்று சிங்கள பேரினவாதிகள் நடத்தும் இன அழிப்பு வெறியாட்டத்தை கண்டும் காணமால் போலிருப்பது, இந்தியாவின் சரித்திரத்தில் இருளடைந்த பாகம் என்றே கூறவேண்டும். இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் சுமுக நிலை மீண்டு வருகிறது என்று மனசாட்சியே இல்லாமல் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மனிதப் பேரவல விவகாரத்தில், தமிழ்நாட்டு முதல்வரின் நிலைப்பாடும், இந்திய மத்திய அரசின் போக்கும், உலகத்தமிழர்களை கடும் வெறுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.


போர் ஓய்ந்து விட்டது என்று கூறிக்கொண்டே, தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை வதைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனவெறிப் போக்கை மலேசியா உட்பட, உலக நாடுகள் உடனடியாக கண்டிக்க வேண்டும். அகதிகள் முகாமென்ற முள்வேலி சிறைக்குள் அடைந்துக்கிடக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை ஏற்படுத்த உலக நாடுகளும், ஐநா போன்ற அனைத்துலக அமைப்புகளும் முயற்சிகளை காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டும். மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் இனவெறி ஆட்டத்திற்கு எதிராகவும், பத்மநாபன் கடத்தல் சம்பந்தமாகவும் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் இந்த விவகாரத்தை நான் எழுப்புவேன். நன்றி.


பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

No comments: