Thursday, August 27, 2009

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள்; தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு உடந்தையாக உள்ளதா மலேசிய அரசு!
28-08-2009
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை கொலைவெறி சிங்கள இராணுவம் மனிதாபிமானமே இல்லாமல் சுட்டுக்கொல்லும் படக்காட்சிகள் இப்பொழுது வெளிவந்துள்ள. பல வருடங்களாக இலங்கையில் இந்த அட்டூழியங்கள் நடந்து வருகின்றது என்று கூக்குரலிட்டு கூறி வந்தனர் ஈழத்தமிழர்களின் மீது பரிதாபப்பட்டவர்கள்; தமிழர்களை இன அழிப்பிலிருந்து காக்கவே நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் என்று வலியுறுத்தி புலிகள் கூறிய பொழுதும், உலக நாடுகளோ, தலைவர்களோ அதனை சட்டைக்கூட செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு கேடயமாக இருந்து அவர்களை காத்து வந்த புலிகளின் இராணுவ பலம் மழுங்கடிக்கப்பட்டப்பிறகு, சிங்கள வெறியர்கள் தங்களின் இன அழிப்பு அட்டூழியங்களை மீண்டும் விருப்பம் போல் மேற்கொள்கின்றனர். தமிழர்களின் காவல் அரணை தகர்த்து விட்டதால் இனி தமிழர்கள் சிங்களவர்களின் அடிமைகள் என்ற போக்கில்தான் செயல்படும் சிங்கள இனவெறி அரசும், இராணுவமும்.

தற்பொழுது மிக பரப்பரப்பாக பேசப்படும் இந்த படக்காட்சிகளைக்கண்டு, மலேசிய தமிழர்கள் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் ஈழத்து உடன்பிறப்புகளை எண்ணி மனம் வெதும்புகின்றனர். இந்த படக்காட்சிகள் வெட்ட வெளிச்சமாக்கியது, சிங்கள இராணுவ அட்டூழியத்தின் ஒரு பகுதி மட்டும்தான். போரால் பாதிக்கப்பட்டு, இன்று முள்வேலிக்குள் அகதிகள் என்ற பெயரில் சிறைக்கைதிகளாக வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. பசியாலும், பட்டினியாலும் படாதப்பாடுப் படுகின்றனர் அந்த தமிழர்கள். தமிழர்களுக்கெதிராக பல்வேறு வகை கொடுர செயல்கள் அகதிகள் முகாம் என்ற அந்த முள்வேலி சிறைக்குள் நிகழ்த்தப்படுகின்றன. பசியை தமிழர்களுக்கெதிரான வதை ஆயுதமாக சிங்கள இனவெறி அரசு பயன்படுத்துகிறது. அகதிகள் முகாமென்ற அந்த முள்வேலி சிறைக்குள் தமிழீழத்தின் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனர். பிச்சைக்காரர்களே இல்லாத சமூகமாக ஈழத்தமிழர்களை வைத்திருந்தார் பிரபாகரன், அவர்கள் இன்று ஒரு வேலை உணவுக்குக் கூட கையேந்தி நிற்கும் சமூகமாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். வாய்க்கிழிய மனிதாபிமானம் பேசும் உலக நாடுகளின் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டும் பாராமுகமாக இருப்பது ஏனோ? ஈழத்தில் மடிந்துக்கொண்டிருப்பது மனித இனம் அன்றோ?

ஏறக்குறைய 20 நாடுகளின் ஆதரவோடு புலிகளுக்கு எதிராக போரை முன்னெடுத்தது இலங்கை. புலிகளை வெல்கிறோம் என்றுக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாவதை தடுக்க, தங்களது ஆயுதங்களை மௌனப்படுத்தி, அஹிம்சை வழியில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய புலிகளின் தலைமை செயலர் பத்மநாபனையும் அனைத்துலக சட்ட விதிகளை மதிக்காமல் கடத்தியுள்ளது இலங்கை. நாடுக்கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முழுமுச்சாக பணியாற்றுகிறது இலங்கை இனவெறி அரசு. தமிழர்களின் குரலை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது இலங்கை. அமைதியான வழியில், தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய பத்மநாபன் மலேசிய தலைநகர், கோலாலம்பூர்ரில் வைத்துதான் கடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. பத்மநாபன் கைது தொடர்பாக மலேசியாவின் நெடுநீண்ட மௌனம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையா என்ற சந்தேகத்தை வலுக்க வைக்கின்றது. ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் எந்தவொரு நாட்டிலும் இதுப்போன்றதொரு அடிப்படை மனித உரிமையை மீறிய கடத்தல் சம்பவம் அனுமதிக்கப்படாது. பத்மநாபனை கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவியிருக்குமானால், அந்த சம்பவம் மலேசியாவில் வாழும் தமிழர்களை மதிக்காத செயலாகும். மலேசிய அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கும் முயற்சிகளை ஆதரித்து, அந்த தமிழர்களுக்கு உபத்திரவத்தை தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பக்காலம் தொடங்கி இலங்கையில் நடக்கும் மனித பேரவலங்களை தடுக்கக்கோரி மலேசியத்தமிழ்ர்களான நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலேசியத்தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக கண்டனக்கூட்டங்கள் வாயிலாகவும், பேரணிகள் வாயிலாகவும் தெரிவித்தோம். மலேசிய அமைச்சரைவையில் அமர்ந்துள்ள மஇகா அமைச்சர் இந்த விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்புவதாக உறுதியளித்திருந்தார். அப்படி இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் எழுப்பினாறேனில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதையும் அவர் அறிவிக்க வேண்டும். போஸ்னியா, கொசோவோ, சூடான் என உலகின் பல கண்டங்களிலும் நடக்கும் மனிதப்பேரவல விவகாரங்களில் முனைப்புடன் குரல் எழுப்பும் மலேசியா, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை ஒருமுறைக்கூட கண்டிக்காததன் மர்மம் என்ன? இலங்கை அரசின் இனவெறிப் போக்குக்கு மலேசிய அரசும் உடன்போகிறதா என்பதை உடனடியாக விளக்க வேண்டும்.


இலங்கையில் காலங்காலமாக தமிழர்கள் மிக மோசமாக நடத்துப்பட்டுதான் வந்துள்ளனர். ஜெயவர்த்தனே காலம் தொட்டு, இன்றைய மகிந்த இராஜபக்சே ஆட்சி வரை தமிழ் மக்களை சிங்களர்கள் இலங்கையின் குடிகளாக ஏற்றுக்கொண்டது கிடையாது. தங்களது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். ஈழ தமிழர்களின் இன்னலை நீக்கவே பல்வேறான போராளிக் குழுக்கள் இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் தோன்றின. கால ஓட்டத்தில் பல போராளிக்குழுக்கள் தங்களின் சுயநலனுக்காக கொள்கையை கைவிட்டு சிங்கள அரசுகளுடன் கைக்கோர்த்து பண சுகமும், பதவி சுகமும் கண்டன. ஈழத்தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இறுதிவரை போராடிய சுதந்திர அமைப்பை அழித்தொழிக்க உலகத்தின் பல்வேறு ஆதிக்க சக்திகளும் இனவெறி சிங்கள அரசுக்கு துணைபோயின.அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் வல்லரசுகளான இந்தியாவும்,சீனாவும் தெற்காசியாவில் தங்களின் இராணுவ பலத்தை பெருக்க போட்டிப்போட்டுக் கொண்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வாரி,வாரி வழங்கின. ஈழத்தமிழர்களின் காவல் அரணாக நின்ற புலிகளை சாய்ப்பதில் இந்தியா காட்டிய முனைப்பை சற்றும் எதிர்க்காமல், உலக தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களுக்கு இருந்த ஒரேயொரு காவல் அரனையும் தகர்த்து விட்டு இன்று சிங்கள பேரினவாதிகள் நடத்தும் இன அழிப்பு வெறியாட்டத்தை கண்டும் காணமால் போலிருப்பது, இந்தியாவின் சரித்திரத்தில் இருளடைந்த பாகம் என்றே கூறவேண்டும். இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் சுமுக நிலை மீண்டு வருகிறது என்று மனசாட்சியே இல்லாமல் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மனிதப் பேரவல விவகாரத்தில், தமிழ்நாட்டு முதல்வரின் நிலைப்பாடும், இந்திய மத்திய அரசின் போக்கும், உலகத்தமிழர்களை கடும் வெறுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.


போர் ஓய்ந்து விட்டது என்று கூறிக்கொண்டே, தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை வதைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனவெறிப் போக்கை மலேசியா உட்பட, உலக நாடுகள் உடனடியாக கண்டிக்க வேண்டும். அகதிகள் முகாமென்ற முள்வேலி சிறைக்குள் அடைந்துக்கிடக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை ஏற்படுத்த உலக நாடுகளும், ஐநா போன்ற அனைத்துலக அமைப்புகளும் முயற்சிகளை காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டும். மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் இனவெறி ஆட்டத்திற்கு எதிராகவும், பத்மநாபன் கடத்தல் சம்பந்தமாகவும் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் இந்த விவகாரத்தை நான் எழுப்புவேன். நன்றி.


பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

Monday, August 10, 2009

வேதமூர்த்தி அவர்களே, எதுவாக இருந்தாலும் மலேசியாவிற்கு வந்து பேசுங்கள்.

அண்மைய காலமாக தனது அறிக்கைகளின் வழி, தொடர்ந்து மக்கள் கூட்டணியை வசைப்பாடி வரும் வேதமூர்த்தி, அவரது கருத்துகளை இந்த நாட்டிற்கு திரும்பிவிட்டு பேசலாம். அந்நிய நாட்டில் உட்கார்ந்துக்கொண்டு தலையும் தெரியாமல், வாழும் தெரியாமல் அறிக்கைகள் விடுவதை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.

கடந்த சில மாதங்களாகவே தனது அறிக்கைகளில் மக்கள் கூட்டணியின் மீது சேற்றை வாரி வீசும் வண்ணம் அறிக்கைகளை வேதமூர்த்தி வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கம்போங் புவா பாலா விவகாரத்தில் தனது அறிக்கை விடும் திறனை சற்று அதிகமாகவே உபயோகிக்கின்றார் வேதமூர்த்தி.

தனது
வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் சட்ட நுணுக்கங்கள் எல்லாம் பேசுகிறார். சட்ட நுணுக்கங்கள் பேசும் வேதமூர்த்தி அவர்களுக்கு, கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மீறும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இல்லை என்பது தெரியாதோ? இந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பற்றி தாங்கள் ஒரு வார்த்தையும் கூறாததன் மர்மம் என்ன? நில கையாக்க சட்டத்தை பயன்படுத்தி கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்துங்கள் என்று கூறும், தங்களுக்கு அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய 10லிருந்து 15 கோடி வெள்ளி வரை செல்லும் என்பது தெரியுமா? கடந்த வருடத்தில் பினாங்கு மாநிலத்தின் மொத்த வரவே ஏறக்குறைய 30 கோடி ரிங்கிட் என்பதாவது வேதமூர்த்திக்கு தெரியுமா? மொத்த வரவில் ஏறக்குறைய பெரும்பகுதியை ஒரு பகுதி நிலத்தை கையகப்படுத்த உபயோகித்து விட்டால், பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும், அமல்படுத்தப்படப்போகும் திட்டங்கள் பலவற்றை மாநில அரசு கைவிட வேண்டிய நிலை வரும். ஆண்டு தோறும் மாநிலத்தில் உள்ள 28 தமிழ்பள்ளிகளுக்கு வழங்கப்படும் 1.5 மில்லியன் ரிங்கிட் மான்யம், ஆலயங்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் வழங்கப்படும் மான்யம், 60 வயதைக்கடந்த முதியோர்களுக்கு வழங்கப்படப்போகும் சிறப்பு நிதி, கடுமையான ஏழ்மையை ஒழிக்க ஒதுக்கப்படும் மாநில அரசின் சிறப்பு நிதி என்று பல்வேறு மக்கள்நல திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவேதான், கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்று தவறு புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக்கிடம் இந்த நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசின் சார்பாக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தேசிய முன்னணி தலைவர் நிராகரித்தபொழுது, இந்த வேதமூர்த்தி ஏதும் பேசாமல் மௌனமாக இருந்ததின் அர்த்தம் என்ன? கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றது தேசிய முன்னணிதான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று, இருந்த பொழுதிலும் தேசிய முன்னணியை இந்த விவகாரத்தில் பொறுப்பேற்குமாறு யாருமே கூறவில்லை; குறிப்பாக வேதமூர்த்தி கூறவில்லை. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த பரவசி மாநாட்டில் கூட தேசிய முன்னணி மலேசிய இந்தியர்களை புறக்கணிக்கிறது என்று துண்டு அறிக்கைகள் எல்லாம் கொடுத்த வேதமூர்த்தி, இப்பொழுது வெட்ட வெளிச்சமாக தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை பலிகடா ஆக்கும் விதமாக அறிக்கை விடுவதின் மர்மம்தான் என்ன?

தனது அறிக்கைகளில் மாநில முதல்வரை இனவாதி என்றும், துணைமுதல்வரை மண்டோர் என்றும் கூறியிருக்கும் வேதமூர்த்தி யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று தெரிந்துக் கொள்ளலாமா? கடந்த சில வருடங்களாக இலண்டனில் வசித்து வரும் வேதமூர்த்தி, மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஏதுவாகத்தான் மக்கள் கூட்டணியை தாக்கும் படலம் தொடங்கியுள்ளதா என்பது அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியாகும்.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், வேதமூர்த்தி ஏதேதோ பேசி, அறிக்கைகள் விடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. களத்தில் இறங்கி நிலைமைகளை கண்டறிந்தவர்களுக்கே கம்போங் புவா பாலா பிரச்சனையின் உண்மை நிலவரம் புரியும். எதோ ஒரு அந்நிய தேசத்தில் ஒளிந்துக்கொண்டு அறிக்கை விடுவதால் எல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. புவா பாலா பிரச்சனையில் அந்த மக்களுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித்தர மாநில முதல்வரும், துணை முதல்வரும் எடுக்கும் முயற்சிகளைப் பற்றி, எதோ ஒரு மூலையில் அமர்ந்துக்கொண்டு சவடால் பேசும் வேதமூர்த்திக்கு தெரியாமலிருப்பது அதிசயமல்ல. தலையும் புரியாமல், வாளும் புரியாமல் உங்களைப்போன்ற சிலர், கம்போங் புவா பாலா பிரச்சனையில் மூக்கை நுழைத்து, அங்குள்ள மக்களை குழப்பிக் கொண்டிருப்பதால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதில் குழப்பம் நீடிக்கிறது. இப்பொழுது இறுதி தீர்வாக, கம்போங் புவா பாலா மக்கள் அவர்கள் வாழ்ந்த அந்த நிலத்திலேயே 5 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரட்டை மாடி வீடுகளை பெறும் ஒரு அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இறுதி தீர்வுத்திட்டத்தையும் சீர்குலைத்து பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க ஒரு தரப்பு வேலைகளை செய்து வருகின்றது. வேதமூர்த்தியின் அறிக்கைகளும் அந்த தரப்போடு ஒத்துப் போவதைப்போல அமைந்துள்ளதுதான் வியப்பாக உள்ளது.

இறுதியாக வேதமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தாங்கள் எந்த விவகாரத்திலும், எந்தவொரு கருத்தை சொல்ல விரும்பினாலும் மலேசியாவிற்கு வந்து கூறினால் சிறப்பாக இருக்கும். எது எப்படி இருப்பினும், நாம் பிறந்த மண் இதுதான், எதுவாக இருந்தாலும் இங்கிருந்து பேசுவதும், போராடுவதும்தான் ஒரு உண்மையான தமிழ் மகனுக்கு சிறப்பு. சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழனும் அதையே விரும்புவான். பிரபாகரன் என்ற மாவிரன் பிறந்த இனம் நம் தமிழினம்!! வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் தாய் மண்ணை விட்டு போக மாட்டேன் என்ற உறுதியோடு போராடிய அந்த மறத்தமிழனின் வழி வந்த தமிழ்ர்கள் நாங்கள். எங்கள் போராட்டம் எல்லாம் இந்த மண்ணில் தொடங்கி, இந்த மண்ணிலேயே முடியும். யாருக்கும் பயந்தோ, எதற்கும் அடிபணிந்தோ கோழைகளைப் போல் ஓடி ஒளியாமல் இங்கிருந்தே போராடுவோம். இதையெல்லாம் மறந்து விட்டு அந்நிய தேசத்தில் மறைந்துக்கொண்டு அறிக்கைவிடும் தங்களுக்கு பினாங்கு மாநில அரசைப் பற்றியோ, துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியைப் பற்றியோ பேசுவதற்கு அருகதைக் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியும் நீங்கள் தொடர்ந்து பேராசிரியர் அவர்களைப் பற்றியோ, பினாங்கு மாநில அரசைப் பற்றியோ சிறுமைப்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. மைக்கா ஹோல்டிங்க்ஸ் குளறுபடிகளுக்கு பிறகு பொருளாதார ரீதியாக மலேசிய தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இலண்டனில் பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போகிறோம், இந்த நாட்டு இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறோம் என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இஅய்க்கத்தின் முன்னோடிகள் ஐவர் கைது செய்யப்பட்டப் பிறகு, அந்த வழக்கை முன்னெடுப்பதாகக் கூறித்தானே மலேசிய தமிழர்கள் வாரிக்கொடுத்த இலட்சக்கணக்கான பணத்தோடு இலண்டன் சென்றீர்கள். அந்த வழக்கு என்ன ஆனது? இசா சட்டத்தின் கீழ் கைதாவதற்கு முன் அந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து முன்னேற்பாடுகளையும் முன் செய்த அந்த தலைவரிடமே கேட்போமா?

நீங்கள் மலேசியாவிற்குள் திரும்பகையில் கைதாகமால் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நேரடியாக அரசாங்கத்திடமோ, காவல்துறையுடனோ பேசுங்கள், அதை விடுத்து தேசிய முன்னணியை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் மக்கள் கூட்டணி மீது அவதூறுகளை கூறாதிர்கள். மக்களை குழப்பும் வண்ணம் இனியும் நீங்கள் அவதூறு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால் இப்பொழுது நான் வெளிக்கொனர்ந்திருப்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான், இதற்கு மேல் வெளிவரும் உண்மைகள்அதிரடியாக இருக்கும் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

இங்கனம்,

சத்திஸ் முனியாண்டி,
பினாங்கு மாநில துணை முதல்வர்
பேராசிரியர் இராமசாமி அவர்களின்
அரசியல் துறை அதிகாரி &
பினாங்கு மாநில ஜசெக சோசலிஸ்ட் இளைஞர் பகுதி
செயற்குழு உறுப்பினர்.