Friday, February 12, 2010

கடந்த 6 மற்றும் 7ஆம் தேதி நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடும் மிகச்சிறப்பாக நடந்தேறியது. வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக இந்த மாநாடு அமைந்ததென்று, மலேசிய பேராளர்கள் பலர் கருத்துரைத்தனர். அதிலும் மிகச்சிறப்பான விடயம் என்னவென்றால் முதலாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது, நமது மலேசிய நாட்டின் தமிழ்த்தலைவர் ஒருவர் என்பதுதான். பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், மாநாட்டின் இரண்டாவது நாளான 7ஆம் தேதி கொள்கையுரையும் ஆற்றினார். அடுத்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, மலேசியாவில் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக மாநாட்டின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது.
இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், மலேசியாவிலிருந்து சென்ற அதிகமான தமிழப்பேராளர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் இரவி, உத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன், இந்தராஃப் தலைவர்கள் கணபதி ராவ், வசந்தக்குமார், கேமரன் மலை சிம்மாதிரி, வர்த்தக பிரமுகர் டத்தோ இரா.அருணாசாலம், பூச்சோங் முரளி, ஜசெக காமாட்சி, ஐபிஎப் மதியழகன், செபராங் பிறை நகராட்சி கவுன்சிலர் இராமச்சந்திரன், தலைநகர் க.கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மலேசியப்பேராளர்கள் இந்த மாநாட்டில் தங்களது ஈடுபாட்டை சிறப்பாக வெளிப்படுத்தினர் என்றே கூறவேண்டும். மாநாட்டின் இரு நாட்களிலும் மலேசியத் தமிழர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக மாநாட்டின் இரண்டாவது நாளன்று மலேசியத் தமிழர்கள் பலர் மாநாட்டில் தங்களது கருத்துகள், கட்டுரைகளை சமர்ப்பித்தனர். உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கட்டுரைகளை சமர்ப்பித்த பேராளர்களின் விவரம் பின்வருமாறு :-
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்
உலகத் தமிழர் சரித்திரத்தில் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு மாநாடு, ஒரு வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக அமையும் என்று நான் நம்புகிறேன். இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் பல்வேறான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர், ஆனால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு அரணும் இல்லை என்பது கவலைக்குரிய உண்மையாகும். அதனால்தான், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, நம்மால் தடுத்து நிறுத்த இயலவில்லை. இன்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அந்த தமிழர்களுக்கு என்ன கதி என்பது இன்றும் வினாவாக உள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில், பலமுறை ஈழத்தமிழர்கள் தொடர்பான தீர்மானங்களை நாங்கள் கொண்டுவர முயன்ற போதும், அத்தீர்மானங்கள் காரணாமில்லாமல் நிராகரிக்கப்பட்டன. உலகத்தில் எங்கு சென்றாலும் அவலங்களை எதிர்நோக்கும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்த இந்த மாநாடு வழிவகை செய்ய வேண்டும் என்று இவ்வேளையில் நான் வேண்டிக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன்
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, இன்று கோவையில் நடைபெறுகின்றது. இதில் மலேசியாவிலிருந்து வந்துள்ள நாங்கள் வரலாற்றின் மிக முக்கிய சந்திப்பில் இருக்கிறோம் என்பதில் பெருமையடைகிறோம். உலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர். தமிழர்களின் மொழிக்கு ஆபத்து, கலாச்சாரத்துக்கு ஆபத்து. பண்பாட்டுக்கு ஆபத்து என்று பல்வேறான ஆபத்துகள் உலகத் தமிழினத்தை தொடர்ந்து பயமுறுத்தி வருக்கின்றன. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய சிலர், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாகும். அந்த வேளையில் உலகத் தமிழர்களின் பாதுகாப்புக்கென மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டு ஏற்பாட்டு குழுவினருக்கு நான் எனது வாழ்த்துகளை தெரிவித்தாக வேண்டும். உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும், அது மொழியை சார்ந்த பாதிப்பாகட்டும், கலாச்சாரத்தை சேர்ந்த பாதிப்பாகட்டும், பண்பாட்டை சேர்ந்த பாதிப்பாகட்டும், தமிழனின் வாழ்வாதரத்தை சேர்ந்த பாதிப்பாகட்டும், முதன்முதலில் அதைத் தட்டிகேட்பதற்கு உலகத்தில் வாழும் தமிழன் தயாராக வேண்டும். அவ்வாறு தயாராகும் பட்சத்தில் தமிழன் வாழ்வுரிமை காக்கப்படும், அந்த கடப்பாடு, வேட்கை முன்பே தோன்றியிருக்குமெனில், ஈழத்தில் இன்று சோகமான அந்த முடிவு ஏற்பட்டிருக்காது.
ஹிண்ட்ராஃப் கணபதி ராவ்
உலகத்தின் எந்த மூலையில் தமிழருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைத் தட்டிக்கேட்கும் தைரியம் உலகத் தமிழர்களுக்கு வரவேண்டும். அவ்வாறு தைரியத்தை வரவழைப்பதற்கு முதற்படியாக இன்றைய இந்த மாநாடு அமைய வேண்டும் என்பது நமது விருப்பமாகும். இன்றைய மாநாட்டின் வெளிப்பாடாக, உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலகத் தமிழர்களின் பல்வேறான பிரச்சனைகளுக்கும் அந்த பாதுகாப்பு மையத்தின் வழியாக குரலெழுப்பி நாம் தீர்வு காண வேண்டும் என்பது எனது தாழ்மையான் வேண்டுகோள். நமது ஈழத்து சகோதரர்களுக்கு இன்று நிகழ்ந்துள்ள கடமை இதுபோன்ற ஒரு பாதுகாப்பு மையம் ஒன்று இல்லாததால் ஏற்பட்டுதுதான். மலேசியாவிலும் நாங்கள் பல்வேறான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகிறோம்; ஆனால் அவற்றை தனியாக எதிர்கொண்டுதான் வருகிறோம். எங்களது உரிமைகளை தற்காக்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம், இனியும் போராடுவோம்; அது உலகத் தமிழனின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட போராட்டம் என்றால் நிச்சயம் நாங்கள் அதில் அங்கம் வகிப்போம். அந்த போராட்டம் அமைதி வழியிலான ஜனநாயக போராட்டமாக இருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
ஹிண்ட்ராஃப் வசந்தக்குமார்
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு இன்று வந்திருக்கும் மலேசியத் தமிழர்களான நாங்கள், தினம், தினம் போராடி வருபவர்கள். எங்களின் அன்றாட வாழ்வே போராட்டம் போன்றதுதான். ஆகவே, போராட்டம் என்று வந்து விட்டால் நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். இன்று மலேசியாவில், தமிழ் மொழிக்கு மிகப்பெரும் ஆபத்து நெருங்கியுள்ளது. மலேசியாவின் உயர் பள்ளிக்கூட தேர்வில், தமிழ் பாடத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது, அதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகின்றோம். தமிழ்மொழியை மலேசிய மண்ணிலிருந்து அழிய விடாமல் இருக்க நாங்கள் நடத்தும் அந்த போராட்டத்தில், நாங்கள் மீண்டும் சிறைக்கு சென்றாலும் பாதகமில்லை. எனது இனத்திற்காக எந்தவொரு தியாகத்தை செய்யவும் நான் தயராகவுள்ளேன், என்னுடைய அருமை போராட்டவாதிகள் தயாராகவுள்ளனர்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அன்பழகன்
இன்று உலகம் எங்கும் தமிழர்கள் பரவிக்கிடக்கிறார்கள். தமிழகம், இலங்கை நாடுகளுக்கு அடுத்த நிலையில் அதிகமான தமிழர்கள் வாழும் நாடாக மலேசியா உள்ளது. இந்த மலேசிய திருநாட்டில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நான் உங்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாலுமியில்லா கப்பலில் சிக்கி பரிதவிப்பவர்கள்தாம் மலேசியத் தமிழர்கள். எங்களுக்கென்று சரியான தலைமைத்துவம் இல்லாத்தால், பெரும் பின்னடைவுகளை நாங்கள் கடந்த காலங்களில் சந்தித்து வந்துள்ளோம். இன்று எங்களின் அடிப்படை உரிமையான தமிழ்க்கல்வியின் மீதும் கைவைக்க தொடங்கி விட்டனர். ஈராண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் நாங்கள், இப்பொழுது புதியதொரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளோம், அந்த தலைமைத்துவ மாற்றத்தின் வழி சமூக மேம்பாட்டை காண்போம் என்று நம்புகின்றேன். உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மாநாடு, திருப்புமுனையாக அமைய வேண்டும்.
பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை குழு அமைப்புத்தலைவர் மு.சத்தீஸ்
இன்று கோவை மாநகரில், கடல் அலையென திரண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களை காண்கையில் உள்ளம், உவகை கொள்கின்றது. வரலாற்றின் மிக முக்கிய சந்திப்பொன்றில் நாம் இருக்கின்றோம். உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், ஏளனமாக தமிழன் நடத்தப்படுகின்றான். ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டத்தை தடுக்காமல் வரலாற்று பிழையொன்றை இந்த தமிழகத்தின் தலைவர் ஒருவர் நிகழ்த்தியுள்ளார், அவரின் பெயரைக்கூட நான் சொல்லப்போவதில்லை. தனது போராட்டத்தை உலகத் தமிழர்களின் தோளில் சுமத்திவ்ட்டு சென்றுள்ளார் தலைவர் பிரபாகரன்; தமிழகத்தில் ஏற்படும் மாபெரும் அரசியல் மாற்றத்தின் மூலம் அந்த போராட்டம் வெற்றி பெரும். நாடுகடந்த தமிழீழ அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்து நாம் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்போம். மலேசியாவில் கூட தமிழர்கள் பிச்சைக்காரர்களாக வந்தேறியவர்கள் என்று ஏளனப்படுத்தப்படுகிறோம். இந்த நிலையை மாற்றியமைக்க, சினிமா மாயையிலிருந்து வெளியேறி மாபெரும் மாற்றத்தை கோண்டுவர இளைஞர்களே நீங்கள் புறப்படுங்கள்.
தொடர்ந்து இந்த மாநாட்டில் பினாங்கு தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் செ.குணாளன் இனியொரு விதி செய்வோம் என்றதொரு புதுக்கவிதையையும் சமர்ப்பித்தார்.
மாநாட்டின் இறுதியமர்வில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் உலகத் தமிழர்களின் பாதுகாப்பு, அவர்களின் வாழவாதார உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்துவதாக இருந்தன. அனைத்து தீர்மானங்களும் வந்திருந்தவர்களின் அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கொள்கையுரையாற்றிய பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி. உலகத் தமிழர்களின் வாழ்வாதாரம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தமதுரையில் மிக எளிதாக விளக்கினார். இன்று ஈழத்தமிழ் போராட்டம் நசுக்கப்பட்டதற்கு இந்தியா துணைபோன காரணத்தினால்தான் அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற பரவாசி மாநாட்டை நான் புறக்கணித்தேன். இந்தியாவின் அந்த மாபெரும் துரோகத்தை தட்டிக்கேட்காமல் அமைதியாக் இருந்த தமிழக அரசையும் நான் வன்மையாக கண்டித்தேன். இதே கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்தாலும் நான் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனமானமுள்ள எந்தவொரு தமிழனும் அந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டான். உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களின் வேட்கையெல்லாம் தனியொரு தமிழீழம் அமைய வேண்டுமென்பதாகவே இருக்கின்றது. அந்த தமிழீழ போராட்டம்தான் இன்று அரசியல் பரிமாணம் பெற்று நாடுகடந்த தமிழீழ அரசாக மலர்ந்துள்ளது. அந்த நாடுகடந்த தமிழீழ அரசின் போராட்டங்களுக்கு உலகத் தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய மாநாடு வெறும் கூடிக்களையும் மாநாடாக இல்லாமல், உலகத் தமிழர்களுக்கு ஆக்ககரமான நலன்களை ஏற்படுத்தும் மாநாடாக இருக்க வேண்டும். இன்றைய மாநாட்டின் வெளிப்பாடாக உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்படும், அந்த மையம் உலகத் தமிழர் சார்ந்த விவகாரங்களில், அனைத்து தமிழ், தமிழர் நலன் சார்ந்த அமைப்புகளோடு ஒன்றிணைந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாநாட்டுக்குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நன்றியுரை ஆற்றினார். இன்றைய மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகையளித்து, மாநாட்டை தொடக்கி வைத்து, கொள்கையுரையும் ஆற்றிய பேராசிரியர் இராமசாமிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். இந்திய அரசு நடத்தும் மாநாட்டையும், தமிழக முதல்வர் பெரும் ஆரவாரத்தோடு நடத்தும் செம்மொழி மாநாட்டையும் புறக்கணித்து விட்டு, நமது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பேராசிரியருக்கு இந்த தமிழினத்தின் மீதுள்ள பற்றை நினைத்து தாம் பெருமையடைவதாக கூறினார். மாநாட்டின் தீர்மானங்களை விளக்கமாக எடுத்துக்கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு மிக முக்கியமான தீர்மானத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இலங்கையின் வட கிழக்கில், முள்வேலி முகாமெனப்படும் வதை முகாம்களில் வைத்து கொடுமை செய்யப்படும் தமிழர்களை, இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க அடுத்து வரும் 100 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், தமிழகத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் தமிழ் இளைஞர்கள் இலங்கையை நோக்கி கடல்வழியாக பயணப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அடுத்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, மலேசியாவில் நடைபெறும் என்று அறிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முதல் முறை மாநாடு சிறப்பாக நடந்து முடிய அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த அனைவருக்கும் தனது ஏற்பாட்டுக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்ட மலேசிய பேராளர்களை பாராட்டிய அவர் வரும் காலங்களில் தமிழர் நலன் குறித்து ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு மாநாட்டிலும், உலகத்தமிழர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

மாநாட்டு கொடியையும், மாநாட்டு சின்னத்தையும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை ஏற்று நடத்தும் மலேசியாவின் சார்பாக, பினாங்கு மாநில் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி பெற்றுக்கொண்டதோடு, மாநாடு இனிதே முடிவுற்றது.

No comments: