Tuesday, December 29, 2009

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாடு மற்றும், கருணாநிதியின் செம்மொழி மாநாடு ஆகியவற்றை நான் புறக்கணிக்கிறேன்-பேராசிரியர் இராமசாமி

உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு ஏற்பாட்டுக்குழுவினரோடு பேராசிரியர் இராமசாமி மற்றும் அவரின் அந்தரங்க செயலாளர் ஜெயபாலன்

டாக்டர் கிருஷ்ணசாமி பேராசிரியர் இராமசமியிடம் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழை வழங்குகிறார்
ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும், கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஆவரின் அறிக்கை கீழ்காணுமாறு :-

இந்தியாவில் நடக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடான பரவசி மாநாட்டிற்கு பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பானது, ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் தங்குதல் மற்றும் சிறப்பு வகுப்பு விமான டிக்கெட் ஆகிய செலவுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இந்த மாநாட்டை பேராசிரியர் இராமசாமி புறக்கணிக்கிறார். அதற்கான காரணத்தை அவர் விவரிக்கையில் கூறியது :-

"தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டார்கள். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.

அதேப்போல தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர். கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை. பக்கத்து தேசத்தில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?

கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் அதேவேளை தமிழகத்தின் கோவையில் இனமானமுள்ள தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்கிறேன். மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையை புலப்படுத்த வேண்டும். மலேசிய தமிழர்களான நாம், ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்கு கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தையும் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது. நன்றி."

No comments: