Thursday, September 17, 2009

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - உரை

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - வாழ்த்துரை

உலக தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதை அறிகின்றேன். உலக தமிழர்களின் ஒற்றுமையை நாம் மாநாடு கூட்டி பேசுகின்றோம், தினம் பத்திரிகை அறிக்கைககளில் படிக்கின்றோம், பல்வேறு சமயங்களில் உலக தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம், கருணாநிதி பேசுகிறார், ஜெயலலிதா பேசுகிறார், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் பேசுகின்றனர், மலேசியாவில் உள்ள தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் உலக தமிழர்களிடத்தில் உண்மையில் ஒற்றுமை நிலவுகின்றதா என்பதுதான் தற்போதைய கேள்வி. அந்த கேள்விக்கான பதிலும் நாம் அறிந்த கசப்பான உண்மைதான். உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவவில்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவாததற்கு காரணம், சரியான தலைமைத்துவம் இல்லாததே ஆகும். தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம் சரியான தலைமைத்துவம் இல்லாமையே ஆகும். உலக தமிழர்களுக்கு இந்த தலைமைத்துவ இல்லாமை மிகப்பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்கள் தத்தம் அரசியல் வேறுபாடுகளை முன்னிறுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளால் தமிழக தமிழர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். உலகளாவிய தமிழர்களின் பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளும் இந்த வேற்றுமைக்கு வழி வகித்து விட்டிருந்தது. ஒரு தூரநோக்கமுள்ள, அரசியல், சமூகவியல், பொருளாதார சித்தாந்தம் கொண்ட ஒரு தலைவர் இல்லாததால்தான் தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு முழுமுதற் காரணம் எனலாம். தமிழர்களின் ஒற்றுமையை புலப்படுத்தும் வண்ணம் மிக அண்மையில் நாம் ஒன்று பட்டது தமிழீழ விடயத்தில்தான். ஒற்றுமைக்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்துக்கிடந்தோம். ஆகமொத்தத்தில் தமிழர்கள் ஒன்றுபடுவது என்பது குறிஞ்சி மலரை விட அபூர்வமான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.


தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களின் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை விவகாரம் தலையோங்கியே உள்ளது. தமிழர்கள் மத்தியில் நிலவும் வேற்றுமைகளுக்கு
பல்வேறு

காரணங்கள் உள்ளன. அடிப்படையில் நமக்குள் இருக்கும் சரித்திர வேற்றுமைகள், அரசியல் வேற்றுமைகள், மற்றும் சமூக, பொருளாதார வேற்றுமைகளும் நமது தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாமல் செய்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகம் சரித்திரம் அனைத்தையும் கடந்து நாம் ஒன்று பட்டது தமிழ் ஈழத்திற்கான உரிமை போராட்டத்தில்தான். தமிழ் ஈழத்தின் சுதந்திரத்தையும், தமிழ் இனத்தின் மாண்பையும் முன்னிறுத்தி நடந்த தமிழீழ போராட்ட களம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், போர் இறுதிக்கட்டத்தை அடைந்த கடந்த ஓராண்டில்தான் நமது குரல் மிக திண்ணமாக ஒலித்தது எனலாம். இருப்பினும், அதற்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்திருந்தோம் என்பதை மறுக்க இயலாது. புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஈழத்து சகோதரர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்த பொழுது, தாய்த் தமிழகத்தில் அரசியல் குடுமிப்பிடி சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன. அரசியல் கூட்டணிகளை முன்னிறுத்தியே தமிழகத்தின் தலைவர்களின் அசைவுகள் இருந்தன. ஈழத்தில் செத்து மடியும் தமிழனையும் மிஞ்சி நமக்கு தேவை ஆட்சிக்கைட்டில்தான் என்ற வாக்கில் நடந்துக்கொண்டனர் சில தமிழ் தலைவர்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்கு நிலவி வந்த அரசியல் வேற்றுமைகளை மறந்து தமிழீழம் மலர ஒன்று பட்டிருந்தால் ஈழப்போர் கசப்பான முடிவை எட்டியிருந்திருக்காது. தமிழினத்தின் மாண்பு ஒன்றே தன் நோக்கம் என்று போராடிய அந்த மாவிரனின் தலைமைத்துவத்திலும் கூட நம் தமிழர்கள் ஒன்று படாமால் பிரிந்துக்கிடந்தனர் என்பது வருந்தத்தக்க உண்மை. தமிழ் இனத்தின் அடிப்படை பலவீனமே துரோகத்தில் அடங்கி போய் விட்டதால்தான் ஈழப்போர் கசப்பான ஓர் இடைவெளியை எட்டியுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் புதிதான ஒன்றல்ல, கட்டபொம்மனை காட்டி கொடுத்ததும் எட்டப்பன் என்ற ஒரு தமிழன்தான்; பிராபாகரனை காட்டிக்கொடுத்தும் தமிழர்கள்தாம். துரோகத்தை தமிழினம் வெல்லும் நாளில்தான் தமிழினம் ஒன்று பட முடியும்.

வருங்காலத்தில் தமிழினத்தின் ஒற்றுமைக்கு அடிப்படையாக அமையப்போவதும் ஈழப்போராக அமையும் பச்சத்தில் தமிழர்கள் தங்களிடேயே நிலவும் சின்ன, சின்ன வேற்றுமைகளைக் கூட புறந்தள்ளிவிட்டு ஒரே குரலில் ஈழத்தின் விடுதலையை வென்றெடுக்க வேண்டும். மலேசியாவிலும் ஈழத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட நிலைகளில் தமிழர்கள் ஒன்றிணைந்தனர் என்பது இங்கெ குறிப்பிடத்தக்கது.

மலேசியா தமிழர்கள் என்று பார்க்கையில், கடந்த 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள், தங்களின் கலாசார, பாரம்பரிய பின்னணிகளோடு இங்கேயே தங்கி விட்டிருந்தனர். இந்த நாட்டின் வளர்ச்சியில் அபரிதமான பங்காற்றி, நாட்டின் மிகப்பெரிய இனமாகவும் தமிழர்கள் இருந்து வந்துள்ளனர். மலேசியாவை பொறுத்தவரை தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் பின்தள்ளப்பட்டனர். தமிழர்களின் ஒற்றுமையை பல்வேறு நிலைகளிலும் இந்த நாடு கண்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் இருந்த பொழுது கூட தமிழர்களின் எழுச்சி பல்வேறு கட்டங்களை தாண்டி வந்துள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையை ஒரு கண்ணாடி கோட்டையோடு ஒப்பிடலாம். ஒரு சிறு கல் பட்டாலும் கண்ணாடி கோட்டை சிதறி விடுவதைப்போல் மலேசிய தமிழர்களின் ஒற்றுமையும் கடந்த பல ஆண்டுகளில் சிறு, சிறு விடயங்களுக்கவேல்லாம் சிதறியுள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையின்மையை ஒரு குறிப்பிட்ட தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்நாட்டில் ஏகபோக கோலேச்சி வந்தது. தமிழர்களின் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களின் உரிமைகள் மிக எளிதில் ஏப்பம் விடப்பட்டன. உரிமைகளை இழந்த தமிழினத்தின் முதுகில் ஏறி காலத்திற்கும் குதிரை சவாரி செய்யலாம் என்றிருந்த ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் மனக்கோட்டையை நவம்பர் 25 பேரணியின் மூலம் உடைத்தெறிந்தனர் மலேசிய தமிழர்கள். அந்த ஒற்றுமையாவது நீடித்ததா என்றால், கடந்த ஓராண்டில் நம் சந்தித்த பிளவுகள் எத்தனை. 7 சதவீத தமிழர்களுக்கு இந்த நாட்டின் எட்டு கட்சிகள். நமது இனத்தின் தலையெழுத்து எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை. ஒற்றுமை என்பதை அடைய நமக்கு ஏன் இத்தனை கடினம்? கடினத்திற்கு காரணம்தான் என்ன?

தமிழீழத்தில் இன்றும் எண்ணற்ற சகோதரர்கள் சொல்ல முடியாத வேதனைகளில் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர். பிரபாகரன் என்ற அந்த மாபெரும் தலைவன், ஒற்றுமையை வற்புறுத்தி தமிழர்களை ஏற்றுக்கொள்ள செய்தார். அந்த ஒற்றுமை இருந்த வரை தமிழர் படை எண்ணற்ற வெற்றிகளை குவித்தது. துரோகம் தலைத்துக்கியதால், ஒற்றுமையும் சிதைந்து, போர் கசப்பான கட்டத்தை எட்டி விட்டது. ஆனால் அது முடிவு அல்ல. தமிழர் ஒற்றுமையாக இருந்து ஈழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வரும்பொழுது எந்தவொரு பிணக்கமும் இல்லாமல் ஒன்றிணைத்து நமது ஈழத்து சகோதரர்களின் இன்னலை தீர்ப்போம்.

பேராசிரியர் இராமசாமி,

பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

No comments: