Tuesday, May 26, 2009

மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.



மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.


இலங்கை இனவெறி அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை அரசு கொண்டு வரும் எந்தவொரு தீர்மானத்தையும் ஆதரிக்கக்கூடாது என்பது மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இலங்கையில் நடந்துக்கொண்டிருக்கும் மனித பேரவலங்களை கண்டும் காணாமல் போலிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதை மலேசிய அரசு உணர வேண்டும். மலேசிய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் மலேசிய அரசுக்கு அதனை எடுத்துக்கூற வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் தீர்மானத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாடானது, மலேசியாவில் வாழும் தமிழர்களின் மனதை பெரிதும் பாதித்துள்ளது. பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை கடுமையாக எதிர்க்கும் மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை கண்டும் காணாதது போல் இலங்கையின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது மலேசிய தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் செயலாகும். இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகளை கண்டிக்கும் மலேசியா, இலங்கை நடத்தும் படுகொலைகளை ஆதரிப்பது போல் நடந்துக்கொள்வதை எந்தவொரு மலேசிய தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும், அல்லது மலேசிய வெளியுறவு துணையமைச்சராக இருக்கும் தமிழராவது அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இலங்கையை ஆதரிக்கும் மலேசியாவின் நிலையானது, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதற்கு சமமே. இனப்படுகொலைகளை புரிந்து மனித பேரவலத்தை ஏற்படுத்தும் இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை எந்தவொரு நாடும் ஆதரிக்கக்கூடாது. இஸ்ரேலை எதிர்க்கும் மலேசியா, இலங்கையை ஆதரிப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது. மனிதபிமான விவகாரங்களில் ஒரே நிலைபாட்டோடு மலேசியா செயல்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் இருவேறு கொள்கைகளை கையாள்வது மலேசியாவின் மனிதநேய நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும்.

விடுதலைப்புலிகளோடு போரிடுகிறோம் என்ற சாக்கில், இலங்கையின் வட-கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள மகிந்த இராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கியுள்ளது. போரின்போது இடம்பெயர்ந்தோரை தற்காலிக முகாம்களில் அடைத்து வைத்து பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஸ்ரீ லங்கா அரசின் போக்குகளை உலக நாடுகள் கண்டிப்பாக கண்டித்தே ஆக வேண்டும். மலேசிய அரசாங்கம் உண்மையிலேயே மனிதநேயத்தை மதிக்கும் அரசு என்றால் இலங்கை அரசாங்கத்தின் கொடும் செயல்களை கண்டிக்கத் தவறக்கூடாது. இலங்கை அரசானது, இடம்பெயர்ந்த தமிழ்ர்கள் எந்தவொரு துன்பமும் அனுபவிக்காமல் நலமாகவே உள்ளனர் என்பது போன்ற நாடகம் ஆடுகின்றது. இலங்கை அரசின் இந்த நாடகத்திற்கு உலக நாடுகள், குறிப்பாக மலேசியா உடந்தையாக இருக்கக்கூடாது என்பதுதான் ஒட்டு மொத்த மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ர்களின் நிலையைக் கண்டு, ஐநா செயலாளர் பாண் கின் மூன் கூட அதிர்ச்சியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் மனிதநேயத்தை மதிக்கும் உலக நாடுகள் கட்டாயமாக இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமெரிக்கவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதற்கான முயற்சிகளில் உடனே இறங்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் புரிந்த கொடுமைகளைவிட மிகக்கொடிய போர் குற்றங்களைப் புரிந்துக்கொண்டிருக்கும் மகிந்த இரஜபாக்சே, அவர் சகோதரர் கோதபாய இராஜபக்சே, மற்றும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் தளபதிகள் ஆகியோரை போர் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அவர்கள் ஏற்படுத்திய மனித பேரவலத்துக்கு தக்க தண்டனை வாங்கித்தரப்படவேண்டும். மனிதநேயத்தை மதிக்கும் நாடுகள் இவ்வாறான தீர்மானத்தை முன்மொழியும்பொழுது, மலேசிய அரசு தனது தார்மீக ஆதரவை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, டத்தோஸ்ரீ (துன்) அப்துல்லா படாவி பிரதமராக இருந்த காலத்தில், காசா முனையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து கூட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தில், இலங்கை விவகாரத்தையும் நாம் விவாதிக்க வேண்டும்; அங்கு நடக்கும் படுகொலைகளை தடுத்துநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இராயிஸ் யாத்திம், இலங்கை பிரச்சனையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க முனையவிருப்பதாகவும் கூறியிருந்தார். அப்துல்லா படாவி சென்று, நஜீப் துன் ரசாக்கும் வந்தாகிவிட்டது. இராயிஸ் யாத்திம் முடிந்து, அனிபா அமான் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் ஆகி விட்டார். ஆனால், இலங்கை விவகாரத்தைப் பற்றி மலேசிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது, மலேசிய தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயத்தை மதிக்கும் நாடு என்ற வகையிலும், மனித உயிர்களின் மீது அக்கறை கொண்ட நாடு என்ற முறையிலும், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை முன்மொழியும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது. இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் மன ஓட்டத்தை மலேசிய அரசு மதித்து நடக்க வேண்டும். ஜனநாயக நாடான மலேசியா, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள், சம உரிமை பெற்று சுய கௌரவத்தோடு வாழ நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முனைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

No comments: