Saturday, May 30, 2009

ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி


ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி

பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது. புலிகளை வென்று விட்டதாக கூறி வெறறு மாயையை நம்பி கும்மாளமடிக்கும் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள "பிரபாகரனின் உடல்" படங்கள் முற்றிலும் கேலிக்குரியது, கோமாளித்தனமானது. கடந்த மே 18-ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனையும் மற்றும் பல முக்கிய தளபதிகளையும் வெற்றிகரமாக கொன்று விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின், புலிகளின் அனைத்துலக செய்தித்தொடர்பாளர் க.பத்மநாபன், புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17-ஆம் தேதி நடந்த சமரில் வீரமரணம் அடைந்ததாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் தெரியும் முரண்பாடுகளை காணும்போது இந்த செய்திகளெல்லாம் வெறும் வதந்திகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதன் மூலம் புலிகளின் இயக்கத்தை உடைக்க இலங்கை இராணுவம் செய்யும் சதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. புலிப்போராளிகளை உளவியல் மூலமாக பலவீனப்படுத்தும் அதே வேளை, அனைத்துலக நாடுகளிடம் இருந்து தமிழர் பகுதிகளில் மீழ்கட்டமைப்பு என்ற சாக்கில் பொருளுதவிகளை பெறுவதற்காகவும், இலங்கை இனவெறி அரசு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் திண்ணம். அதே வேளையில், தலைவர் பிரபாகரன் உடல் என்று கூறி சிங்கள இராணுவம் காட்டும் உடல் பிரபாகரனுடையுதுதானா என்ற சந்தேகமும் உலகத்தமிழர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. கண்டிப்பாக அது பிராபகரனுடைய உடலாக இருக்காது என்பதுதான் அனைவரது நம்பிக்கையும் கூட.


புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனின் அறிக்கையும், உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள இராணுவம் பிரபாகரன் மரணம் என்று அறிவித்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு பத்மநாபனின் அறிக்கை வெளிவந்துள்ளது மிகப்பெரும் முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் புலிகள் எப்பொழுதுமே தங்களது போராளிகளின் வீரமரணத்தை பற்றிய அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பின்புதான் க.பத்மநாபன் அறிவிக்கிறார், புலிகளின் தலைவரும், தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள் என்று. இந்த ஒரு முரண்பாடே, உலக தமிழர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தி விட்டது. அப்படி, தலைவரும் அவர்தம் குடும்பத்தினரும், மூத்த தளபதிகளும் உண்மையிலேயே வீரமரணம் அடைந்திருப்பார்கள் என்றால், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களின் உடல்கள் எங்கே?

பெரும்பாலானோர் நம்புவதைப் போல் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுமார் 300 போரளிகளோடு, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் இருக்கும் போதே போர் சூன்ய பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறான செய்திகளில் களத்திலிருக்கும் போரளிகளிடமிருந்து வருவதால், இந்த செய்திகள் உண்மையாகவே இருக்கக்கூடும். தமிழகத்தலைவர்கள் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். தலைவர் பிரபாகரன் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் மிக அழுத்தமாக கூறுகின்றனர். அதுதான் உண்மை என்று நாமும் நம்புவோம். தலைவர் பிரபாகரன் அவர்கள், 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை, உலகத்தமிழர்களின் மத்தியில் மிக ஆழமாக வேருன்றியுள்ளது. 5-ஆம் கட்ட ஈழப்போருக்கான ஏற்பாடுகளை தலைவர் முன்னெடுத்து, தானே இம்முறையும் போரை முன்னின்று நடத்துவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பை பற்றிய கேள்விகளும் எழவே செய்கிறது. பிரபாகரனைப் பற்றிய கே.பத்மநாபனின் அறிவிப்பிற்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று உலகத்தமிழர்கள் மத்தியில் பலமான சந்தேகம் இருக்கவே செய்கிறது. இலங்கை இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் மேல் தொடுத்த மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை இந்தியாதான் முழுமூச்சாக ஆதரித்தது என்பதை உலக்த்தமிழர்கள் அறிவார்கள். ஈழப்போரை, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தியா ஆக்கிவிட்டிருந்தது என்பது தெள்ளத்தெளிவான விடயம். புலிகள் 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவார்கள் என்பதும் இந்தியாவிற்கும் தெரியும், ஆகவே புலிகள் வைத்துக்கொண்டு சிங்களவர்க்கும் தமிழர்களுக்கும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதை இந்தியா விருமபவில்லை. ஆகவே, அவசர,அவசரமாக புலிகள் தலைமை அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் அல்லாத தமிழர்களான டக்ளஸ் தேவனந்தா, ஆனந்த சிவசங்கரி ஆகியோரை முன்னிறுத்தி ஓர் சமரச உடன்படிக்கை அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த விரும்பியிருக்கக்கூடும். இந்தியாவின் இந்த இராசத்தந்திர சதியில் க.பத்மநாபனும் விழுந்து விட்டாரா என்ற கேள்வி பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களிடம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. புலிகளை தமிழர்களின் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ளாத இந்தியா, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழமக்களின் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேசுவதற்கு மறுப்பது ஏன் என்ற வினா உலகத்தமிழர்களின் ஒட்டு மொத்த கேள்வியாகும். ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகத்தான் எந்தவொரு அதிகாரப்பகிர்வு யோசனையும் முன்னெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே ஈழத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத டக்ளஸ் தேவனந்தாவுடனோ, ஆனந்த சிவசங்கரியுடனோ, அல்லது துரோகி கருணாவோடோ எந்தவொரு பேச்சுகளும் நடைப்பெறக்கூடாது என்பதுதான் புலம்பெயந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் கருத்தும் கூட.


இறுதியாக, பிரபாகரன் என்ற மாவீரன் பற்றி வரும் செய்திகளில், பல செய்திகள் வெறும் வதந்திகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இப்பொழுது இருப்பதை விட பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்தது தமிழீழப் போராட்டம். அவ்வாறான பல்வேறான இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் கடந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன். ஆகவே, இப்பொழுது நிகழும் இந்த குழப்பமிகுந்த சூழ்நிலையையும் கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் பிரபாகரன் முன்னெடுப்பார் என்று தாராளமாக உலக்த்தமிழர்கள் ந்ம்பலாம். மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன். பிரபாகரனுக்கு மரணமே கிடையாது; என்றென்றும் தமிழர்களின் மனதிலெல்லாம் அவர் வாழ்ந்துக்கொண்டுதானிருப்பார். பூமிப்பந்தில் தமிழர் என்ற இனம் உள்ளவரை பிரபாகரனின் புகழை சரித்திரங்கள் பாடும். ஆகவே, உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக மலேசியத்தமிழர்களான நாம், ஈழத்தமிழர்களுக்கு நம்மால் ஆன உதவிகளயெல்லாம் செய்து, அவர்களின் வாழ்வுரிமை போராட்டம் வெற்றிப்பெற உறுதுணையாக இருப்போமாக.


பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்,
மலேசியா

Thursday, May 28, 2009

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு....

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்!! இலங்கை தூதருக்கு பேராசிரியர் இராமசாமி எச்சரிக்கை!!

இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரை கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுப்போல் உள்ளது.


மலேசியத்தமிழர்கள் பொதுவாகவே தங்களது ஈழத்து சகோதரர்கள் மீது அளவிலா அன்பும், பற்றும் கொண்டுள்ளவர்கள். தங்களது இன சகோதரர்கள் ஈழத்தில் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கொலைவெறிப் போரில் சிக்கித் தவிப்பதைக் கண்டு, மனம் வெதும்பி அமைதியான முறையில் நடத்தும் கண்டனக் கூட்டங்களை ஏளனம் செய்வதைப்போல் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கை தூதரின் பேச்சை நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனிமேல் இதுப்போன்ற முட்டாள் தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் சொல்லென்னா துயரைக் கண்டு மனம் வெதும்பிகிடக்கும் எங்களை, மலேசியாவில் உள்ள சிங்கள காடையர் அரசின் பிரதிநிதிகள் வீணே சீண்டி பார்க்கவேண்டாம். நாங்கள் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளமையால் யாரும் எங்களை வீணே சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இந்நாட்டு தமிழர்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல என்பதை தமிழினத்தின் எதிரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகளை வென்று விட்டோம் என்ற வெற்று மாயையில் உழ்ன்றுக்கொண்டிருக்கும் இந்த சிங்கள காடையர் பிரதிநிதிகளின் பேச்சுகள் எல்லாம், நாங்கள் எங்கள் ஈழத் தமிழ் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பை சிதைத்து விடாது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றுமே எமது ஈழத்தமிழ் உறவுகளை மறந்து விடமாட்டோம். ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று தங்கள் மண்ணில் சுதந்திரத்தோடு வாழ மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.




பினாங்கு மாநில துணை முதல்வர்,
பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி

Tuesday, May 26, 2009

மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.



மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள்; இலங்கைக்கு ஆதரவளிக்காதீர்கள்!! மலேசிய அரசுக்கு பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தல்.


இலங்கை இனவெறி அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை அரசு கொண்டு வரும் எந்தவொரு தீர்மானத்தையும் ஆதரிக்கக்கூடாது என்பது மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இலங்கையில் நடந்துக்கொண்டிருக்கும் மனித பேரவலங்களை கண்டும் காணாமல் போலிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதை மலேசிய அரசு உணர வேண்டும். மலேசிய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் மலேசிய அரசுக்கு அதனை எடுத்துக்கூற வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் தீர்மானத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாடானது, மலேசியாவில் வாழும் தமிழர்களின் மனதை பெரிதும் பாதித்துள்ளது. பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை கடுமையாக எதிர்க்கும் மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை கண்டும் காணாதது போல் இலங்கையின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது மலேசிய தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் செயலாகும். இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகளை கண்டிக்கும் மலேசியா, இலங்கை நடத்தும் படுகொலைகளை ஆதரிப்பது போல் நடந்துக்கொள்வதை எந்தவொரு மலேசிய தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும், அல்லது மலேசிய வெளியுறவு துணையமைச்சராக இருக்கும் தமிழராவது அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இலங்கையை ஆதரிக்கும் மலேசியாவின் நிலையானது, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதற்கு சமமே. இனப்படுகொலைகளை புரிந்து மனித பேரவலத்தை ஏற்படுத்தும் இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை எந்தவொரு நாடும் ஆதரிக்கக்கூடாது. இஸ்ரேலை எதிர்க்கும் மலேசியா, இலங்கையை ஆதரிப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது. மனிதபிமான விவகாரங்களில் ஒரே நிலைபாட்டோடு மலேசியா செயல்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் இருவேறு கொள்கைகளை கையாள்வது மலேசியாவின் மனிதநேய நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை வெளியுறவு அமைச்சர் உணர வேண்டும்.

விடுதலைப்புலிகளோடு போரிடுகிறோம் என்ற சாக்கில், இலங்கையின் வட-கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள மகிந்த இராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கியுள்ளது. போரின்போது இடம்பெயர்ந்தோரை தற்காலிக முகாம்களில் அடைத்து வைத்து பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஸ்ரீ லங்கா அரசின் போக்குகளை உலக நாடுகள் கண்டிப்பாக கண்டித்தே ஆக வேண்டும். மலேசிய அரசாங்கம் உண்மையிலேயே மனிதநேயத்தை மதிக்கும் அரசு என்றால் இலங்கை அரசாங்கத்தின் கொடும் செயல்களை கண்டிக்கத் தவறக்கூடாது. இலங்கை அரசானது, இடம்பெயர்ந்த தமிழ்ர்கள் எந்தவொரு துன்பமும் அனுபவிக்காமல் நலமாகவே உள்ளனர் என்பது போன்ற நாடகம் ஆடுகின்றது. இலங்கை அரசின் இந்த நாடகத்திற்கு உலக நாடுகள், குறிப்பாக மலேசியா உடந்தையாக இருக்கக்கூடாது என்பதுதான் ஒட்டு மொத்த மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ர்களின் நிலையைக் கண்டு, ஐநா செயலாளர் பாண் கின் மூன் கூட அதிர்ச்சியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் மனிதநேயத்தை மதிக்கும் உலக நாடுகள் கட்டாயமாக இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமெரிக்கவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதற்கான முயற்சிகளில் உடனே இறங்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் புரிந்த கொடுமைகளைவிட மிகக்கொடிய போர் குற்றங்களைப் புரிந்துக்கொண்டிருக்கும் மகிந்த இரஜபாக்சே, அவர் சகோதரர் கோதபாய இராஜபக்சே, மற்றும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் தளபதிகள் ஆகியோரை போர் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அவர்கள் ஏற்படுத்திய மனித பேரவலத்துக்கு தக்க தண்டனை வாங்கித்தரப்படவேண்டும். மனிதநேயத்தை மதிக்கும் நாடுகள் இவ்வாறான தீர்மானத்தை முன்மொழியும்பொழுது, மலேசிய அரசு தனது தார்மீக ஆதரவை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, டத்தோஸ்ரீ (துன்) அப்துல்லா படாவி பிரதமராக இருந்த காலத்தில், காசா முனையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து கூட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தில், இலங்கை விவகாரத்தையும் நாம் விவாதிக்க வேண்டும்; அங்கு நடக்கும் படுகொலைகளை தடுத்துநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இராயிஸ் யாத்திம், இலங்கை பிரச்சனையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க முனையவிருப்பதாகவும் கூறியிருந்தார். அப்துல்லா படாவி சென்று, நஜீப் துன் ரசாக்கும் வந்தாகிவிட்டது. இராயிஸ் யாத்திம் முடிந்து, அனிபா அமான் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் ஆகி விட்டார். ஆனால், இலங்கை விவகாரத்தைப் பற்றி மலேசிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது, மலேசிய தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயத்தை மதிக்கும் நாடு என்ற வகையிலும், மனித உயிர்களின் மீது அக்கறை கொண்ட நாடு என்ற முறையிலும், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கும் அதே வேளையில் இலங்கை முன்மொழியும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது. இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் மன ஓட்டத்தை மலேசிய அரசு மதித்து நடக்க வேண்டும். ஜனநாயக நாடான மலேசியா, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள், சம உரிமை பெற்று சுய கௌரவத்தோடு வாழ நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முனைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.