Thursday, June 11, 2009

தமிழீழத்தை நோக்கிய பயணம் - மலேசியத்தமிழர்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு!!


தமிழீழததை நோக்கிய தூரநோக்கு பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதராகவே இருப்பார்கள்.

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பாக தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தனிந்த நிலையில் இருப்பதுப்போன்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டதென்ற எண்ணம் ஏற்படக்கூடாது. தமிழினத்தின் தானைத்தலைவன் பிரபாகரனின் கனவு, இலட்சியம் எல்லாம் எப்பொழுதுமே தமிழீழ தாயகத்தை நோக்கியதாகவே இருந்துள்ளது; இனியும் அது அப்படியே தொடரும். போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம்; போராட்டம் ஓயாது என்பதை உலகத்தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும்.

தற்போதைய கால சூழ்நிலையில், உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழின பற்றாளர்களின் ஆதரவோடு வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க (Tamil Eelam Government in Exile) கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் உருவாக்கத்தில் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பானது இன்றியமையாததாக அமைய வேண்டும். தமிழீழ தேசத்தை நோக்கிய பயணமானது, அகிம்சை போராட்டத்தில் தொடங்கி ஆயுத போராட்டமாக உருவெடுத்தது. ஆயுத போராட்டத்திலிருந்து தற்பொழுது இராஜதந்திர நகர்வுகளை நோக்கிய போராட்டமாக மாறுதல் காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதால், தமிழீழ தாயகத்தை நோக்கிய புலிகளின் ஆயுத போராட்டம் ஓய்ந்து விட்டது என்றும், தமிழர்களின் சுய நிர்ணய கோரிக்கைகள் அடக்கப்பட்டுவிட்டன என்பன போன்ற தவறான கண்ணோட்டங்கள் ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழீழ தேசத்தை நோக்கிய பயணம் எப்பொழுதும் இல்லா வண்ணம் ஒரு புதிய பரிணாமத்தில் பயனிக்கப்போகின்றது. ஆயுதப்போராட்டமும், அமைதிப்போராட்டமும் இணைந்த, இராஜதந்திர நகர்வுகள் நிறைந்த ஒரு புதிய போராட்ட பரிணாமம் ஒன்று தலையெடுக்கப்போகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழீழ சுதந்திர போராட்டம், உலக அங்கீகாரத்தை நோக்கி செயலபட வேண்டியது மிக அவசியம். உலக அங்கீகாரத்தை நோக்கி நாம் செல்லும் இந்த காலக்கட்டத்தில், புலம்பெயர் தமிழர்கள், தமிழீழ அரசாங்கத்திற்கு ஒரு வலுவான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி, காரியங்களை செவ்வனே செயல்படுத்தி நமது தலைவனின் இலட்சிய கனவை நினைவாக்குவோம்.

கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டங்களில் வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்க கட்டமைப்பு (Government In Exile) மிக முக்கிய பங்காற்றியுள்ளதை அந்தந்த போராட்டங்களை உற்று நோக்கினால் காணமுடியும். ஆச்சே விடுதலைப்போராட்ட இயக்கமான (GAM) ஸ்வீடனிலிருந்து தனது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்ததை இவ்வேளையில் மிகச்சிறந்த உதாரணமாகக் கூறலாம். அதே போன்ற ஓர் கட்டமைப்பை ஏற்படுத்திதான் கிழக்கு தீமோர் சுதந்திர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துலக அங்கீகாரத்தை பெறுவதில் இது போன்ற வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்க கட்டமைப்புகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. தீபெத்தின் ஆன்மிக தலைவர் தாலாய் லாமா முன்னெடுத்த தீபெத் அங்கீகார போராட்டம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது அனைவரும் அறிந்த உண்மை.

தற்போதைய உள்ள காலக்கட்டத்திலும், தமிழீழ சுதந்திர போராட்டத்தை நோக்கிய பயணம் தமிழர்களுக்கு சாதகமாகவே உள்ளது. இனி வரும் காலக்கட்டங்களில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்தின் வழிமுறைகள்தான் தமிழீழ தேசிய கனவை நனவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பின் மூலம், உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலமும், மனித உரிமை விவாதங்களினூடாகவும், தமிழீழ தேசம் அமைய வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதில் மிக முக்கிய பங்காற்ற முடியும். கடந்த காலங்களில், ஒரு சுதந்திர தேசத்திற்கான அனைத்து அத்தியாவசியங்களையும் உள்ளடக்கி, தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ், கிளிநொச்சியை மையமாக கொண்ட தமிழீழ தேசம் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். ஆகவே, தனி தேசத்தை கட்டியெழுப்பி, ஆளும் தகுதிகள் அனைத்தும் தமிழர்களுக்கு உள்ளது என்பதை தலைவர் நிருபித்துள்ளார்.

இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழர்களின் வாழ்வாதர உரிமைகளை முன்னிறுத்தி, தங்களின் பிறந்த மண்ணில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று ஈழத்தமிழர்கள் கௌரவமான வாழ்க்கை வாழ, தமிழீழ தேசம் மட்டுமே தீர்வாக அமையும். இலங்கையின் வட-கிழக்கில் தமிழீழம் அமைக்க, வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியம். அவ்வாறு அமைக்கப்படும் தமிழீழ அரசாங்கத்திற்கு, அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும்,ஆதரவையும் வழங்க வேண்டிய கடப்பாடு உலகத்தமிழர்களுக்கு உள்ளது. கண்டிப்பாக மலேசிய தமிழர்கள், தமிழீழ தேசியத்திற்கான போராட்டத்திற்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பார்கள் என்பதை இவ்வேளையில் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்.

Tuesday, June 9, 2009

தமிழினத்திற்கு எவ்வகையிலும் உதவாதோரெல்லாம், தமிழ் பத்திரிகைகளின் மீது சேற்றை வாரி வீசுவதா??


வெளியுறவுத்துறை துணையமைச்சராக இருக்கும் கெராக்கானின் கோகிலன், தமிழ் பத்திரிகைகளால் இந்திய சமுதாயத்திற்கு பயன் இல்லை என்று கூறியதாக வந்திருக்கும் பத்திரிக்கை செய்தியைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்நாட்டு தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் பத்திரிக்கைகளின் மீது சேற்றை வாரி வீசும் துணையமைச்சர் கோகிலனுக்கு கடுமையான கண்டனத்தை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் பத்திரிக்கைகள் என்றால் எவ்வலவு வேண்டுமானாலும் எகத்தாளம் பேசலாம் என்ற நினைப்பில் கோகிலன் மிதக்கிறார் போலும். இதே போன்ற அவதூறான கூற்றுகளை சீன பத்திரிக்கைகளின் மீதோ, மலாய் பத்திரிக்கைகளின் மீதோ கூறுவதற்கு கோகிலனுக்கு தைரியம் இருக்கிறதா? சீன பத்திரிக்கைகளை பற்றி இவ்வாறு கோகிலன் கூறியிருந்தால், அவரின் சொந்த கட்சியிலேயே விரட்டியடித்து விட்டிருப்பார்கள். தமிழர்களும், தமிழ் பத்திரிக்கைகளும் இந்த கோகிலன் போன்றோருக்கு கிள்ளுக்கீரை என்ற நினைப்புப்போலும்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ் பள்ளிகளையெல்லாம் மூடி விட வேண்டும் என்று கூறிய ஓர் அரசியல்வாதிக்கும், இந்த கோகிலனுக்கும் எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. தமிழை வாழவைக்கும் தமிழ்பள்ளிகளின் மீதும், தமிழ்பத்திரிக்கைகளின் மீதும் சில கருங்காலிகள் குறியாக இருப்பது ஏனென்றுதான் நமக்கு புரியவில்லை.

இந்த நாட்டு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் தமிழ் பத்திரிக்கைகளின் பங்கு என்ன என்பதை யாவரும் அறிவர். நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ் பத்திரிக்கைகள் எதற்கும் உதவாதவை என்பதைப் போன்ற அறிக்கை வெளியிட்டுள்ள கோகிலன் ஒரு விவரமாறியாத அரசியல்வாதி என்றுதான் கூற முடியும். இந்த கோகிலன் உள்ள இடம் அப்படி; மரத்துக்கு பின்னால் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்றும் “புகழ்ந்த” தலைவர்கள் வந்த கட்சியில் அல்லவா உறுப்பினராக உள்ளார்; இவர் தமிழ் பற்றாளராகவும், உண்மை தமிழராகவும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது அறியாமையை குறிப்பதாகவே இருக்கும்.

மருந்துக்கும் தமிழர்களின் நலன்களைப் பற்றி பேசியில்லாத கோகிலன் போன்றோரெல்லாம் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் எமது சகோதரர்கள் படும் துன்பங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருப்பதே தமிழ் பத்திரிக்கைகள்தான். வெளியுறவுத்துறையில் அமர்ந்துக்கொண்டிருக்கும் கோகிலன், ஈழத்தமிழர்களின் இன்னல்களைப் பற்றி அவரின் அமைச்சரிடம் எப்பொழுதாவது வாய்த்திறந்திருப்பாரா? அவ்வாறு வாய்த்திறந்திருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக மலேசியா நடந்துக் கொண்டிருக்குமா?உலகத்தமிழர்களையெல்லாம் கவலைக்குள்ளாக்கியிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி மறந்தும் பேசியில்லாத இந்த கோகிலன் உண்மையில் தமிழன்தானா என்ற சந்தேகமும் வருகின்றது.

தமிழ் பத்திரிக்கைகளை பழிப்பது தமிழை பழிப்பதற்கு சமம்; தமிழை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம் என்பதை கோகிலன் உணர வேண்டும். இந்தியர் என்ற அடைமொழியை சுமந்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த கோகிலனால், மலேசியத் தமிழர்களின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ள முடியாததால் உடனடியாக பதவி விலக வேண்டும். அதேவேளையில் கோகிலன் தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். கோகிலன் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பி அவரை மன்னிப்புக்கேட்குமாறு வலியுறுத்துவேன்.

பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்