Thursday, December 4, 2008

பினாங்கு - இலங்கையில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் கண்டனக் கூட்டம்

இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. அப்பாவி தமிழ் பொது மக்கள் மீது தொடர்ச்சியாக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடப்படுவதால் சொந்த நாட்டிலேயே 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு மலேசிய தமிழர்களின் ஆதரவினையும் - இலங்கையில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் நோக்கிலும் மலேசியாவின் வட மாநிலத் தமிழ் - தமிழர் சார்ந்த பொது அமைப்புகள் (பினாங்கு கெடா பேராக் பெர்லீஸ் மாநிலங்கள்) சார்பில் கடந்த நவம்பர் 1ம் திகதி ஒரு கண்டனக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் வட மாநில தமிழ் இயக்கங்களில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தமது கண்டனத்தினை வெளிப்படுத்தினர். பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பி.இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்களான திரு. இராயர், திரு. இரவீந்திரன், மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசிய உதவித் தலைவரான ச.த.அண்ணாமலை, தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், ஐபிஎப் கட்சியின் உதவித் தலைவர் திரு. மதியழகன் என பல அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ச.த.அண்ணாமலை அவர்கள் குறிப்பிடுகையில், ஈழத் தமிழர் சிக்கல் என்பது பொதுச் சிக்கல். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இக்கண்டனக் கூட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
சட்டமன்ற உறுப்பினர் திரு. இராயர் அவர்கள், "ஈழத் தமிழர் சிக்கல் என்பது உலகத் தமிழர்கள் சிக்கலாகும். இதனை மனித நேய முறையில் நாம் அணுக வேண்டும். பலமுறை ஈழத் தமிழர் சிக்கல் மலேசிய நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்" என்றார் அவர்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பி. இராமசாமி ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை குறித்த தனது வன்மையான கண்டனத்தினை வெளிப்படுத்தினார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையில் சிங்களவர்கள் தான் வந்தேறிக் குடிகள். தமிழர்களுக்குப் பதில் அவர்கள்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இலங்கை இராணுவம் உடனடியாக இனப்படுகொலையை நிறுத்தியாக வேண்டும். அதற்கு கட்சிகள், அமைப்புகள், நாடுகள் வேறுபாடின்றி உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். வல்லரசு நாடுகள் ஆயுத உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மலேசிய அரசாங்கம் எங்களை தீர்மானங்களை நிராகரித்தாலும் தொடர்ந்து குரல் எழுப்புவதை நிறுத்தமாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டார்.
இறுதியாக, இக்கண்டன கூட்டத்தில் 8 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 37 ஆண்டுகளாக, குறிப்பாக இலங்கைத் தீவின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும்:
1. கண்மூடித் தனமான இராணுவ நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
2. விடுதலைப் புலிகளை அழிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில், ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தமிழ் இன அழிப்பு படுகொலையைச் சிறிலங்கா அரசு முற்றாக நிறுத்த வேண்டும்.
3. ருNர்ஊசு எனப்படும் ஐ.நாவின் மாந்த நேய - மனித உரிமை விதிகளை மதித்து ஏற்று, அதன் அடிப்படையில் சிறீலங்கா அரசு நடந்துகொள்ள வேண்டும் என கண்டிப்பாக வலியுறுத்துகின்றோம்.
4. சிறிலங்கா என்பது ஒரே நாடு என்றும் - அதில் வாழும் எல்லா இன மக்களும் அனைத்து வகையான உரிமைகளையும் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிறிலங்கா அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக பொருளாதார, மருத்துவ, உணவுத் தடைகளை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழர்களை அழித்து வருவதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
5. சிறிலங்கா - ஐ.நாவின் உறுப்பு நாடு என்பதாலும், ஐ.நா என்பது, உலக மக்களின் நலனுக்கு - அமைதிக்கு - வளர்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள உலக அமைப்பு என்பதாலும் - ஐநாவின் பொதுச்செயலர் உயர்திரு. பான் கீ முன் ஈழத்தில் நடக்கும் படுகொலைகள் மற்றும் மாந்த நேயத்திற்கு முரணான செயல்களைத் தடுத்து நிறுத்தும் வண்ணம் உடனே உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

6. பாகிஸ்தான், பாலஸ்தீனம் போன்ற உலக நாடுகளில் இனப் படுகொலைக்கு எதிராக துணிந்து குரல் கொடுக்கும் மலேசிய அரசாங்கம், அதேபோல் ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து சிறீலங்கா அரசாங்கத்தையும் வலியுறுத்தியும்- கோலாலம்பூரில் இருக்கும் சிறிலங்கா தூதுவரையும் அழைத்து பேச வேண்டுகிறோம்.

7. தமிழ் இன அழிப்பைத் தொடர்ந்து நடாத்தி வரும் சிறிலங்கா அரசுக்கு: படையியல், பொருளியல் , ஆயுத, தொழில் நுட்ப உதவிகள் செய்துவரும் இந்தியா - சீனா, பாக்கிஸ்தான், ஈரான், இசுரேல், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யப்பான் மற்றும் பிற உலக நாடுகள் அனைத்தையும் உடனடியாக சகல உதவிகளையம் நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
8. தமிழ் ஈழத்தில், சொல்லொணாத் துன்பத்தில் சிக்குண்டுள்ள நம் தமிழ் உறவுகளுக்கு மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எல்லா வித உதவிகளையும் செய்வோம் என் உறுதியளிக்கிறோம்.

தமிழர் போராட்டம் மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து உதவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இக்கண்டன கூட்டம் நிறைவுபெற்றது.