Thursday, September 17, 2009

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - உரை

உலக தமிழர் ஒற்றுமை மாநாடு - வாழ்த்துரை

உலக தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதை அறிகின்றேன். உலக தமிழர்களின் ஒற்றுமையை நாம் மாநாடு கூட்டி பேசுகின்றோம், தினம் பத்திரிகை அறிக்கைககளில் படிக்கின்றோம், பல்வேறு சமயங்களில் உலக தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம், கருணாநிதி பேசுகிறார், ஜெயலலிதா பேசுகிறார், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் பேசுகின்றனர், மலேசியாவில் உள்ள தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் உலக தமிழர்களிடத்தில் உண்மையில் ஒற்றுமை நிலவுகின்றதா என்பதுதான் தற்போதைய கேள்வி. அந்த கேள்விக்கான பதிலும் நாம் அறிந்த கசப்பான உண்மைதான். உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவவில்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை நிலவாததற்கு காரணம், சரியான தலைமைத்துவம் இல்லாததே ஆகும். தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம் சரியான தலைமைத்துவம் இல்லாமையே ஆகும். உலக தமிழர்களுக்கு இந்த தலைமைத்துவ இல்லாமை மிகப்பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்கள் தத்தம் அரசியல் வேறுபாடுகளை முன்னிறுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளால் தமிழக தமிழர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். உலகளாவிய தமிழர்களின் பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளும் இந்த வேற்றுமைக்கு வழி வகித்து விட்டிருந்தது. ஒரு தூரநோக்கமுள்ள, அரசியல், சமூகவியல், பொருளாதார சித்தாந்தம் கொண்ட ஒரு தலைவர் இல்லாததால்தான் தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு முழுமுதற் காரணம் எனலாம். தமிழர்களின் ஒற்றுமையை புலப்படுத்தும் வண்ணம் மிக அண்மையில் நாம் ஒன்று பட்டது தமிழீழ விடயத்தில்தான். ஒற்றுமைக்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்துக்கிடந்தோம். ஆகமொத்தத்தில் தமிழர்கள் ஒன்றுபடுவது என்பது குறிஞ்சி மலரை விட அபூர்வமான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.


தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களின் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை விவகாரம் தலையோங்கியே உள்ளது. தமிழர்கள் மத்தியில் நிலவும் வேற்றுமைகளுக்கு
பல்வேறு

காரணங்கள் உள்ளன. அடிப்படையில் நமக்குள் இருக்கும் சரித்திர வேற்றுமைகள், அரசியல் வேற்றுமைகள், மற்றும் சமூக, பொருளாதார வேற்றுமைகளும் நமது தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாமல் செய்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகம் சரித்திரம் அனைத்தையும் கடந்து நாம் ஒன்று பட்டது தமிழ் ஈழத்திற்கான உரிமை போராட்டத்தில்தான். தமிழ் ஈழத்தின் சுதந்திரத்தையும், தமிழ் இனத்தின் மாண்பையும் முன்னிறுத்தி நடந்த தமிழீழ போராட்ட களம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், போர் இறுதிக்கட்டத்தை அடைந்த கடந்த ஓராண்டில்தான் நமது குரல் மிக திண்ணமாக ஒலித்தது எனலாம். இருப்பினும், அதற்குள்ளும் பல்வேறு பிரிவுகளாக நாம் பிரிந்திருந்தோம் என்பதை மறுக்க இயலாது. புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஈழத்து சகோதரர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்த பொழுது, தாய்த் தமிழகத்தில் அரசியல் குடுமிப்பிடி சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன. அரசியல் கூட்டணிகளை முன்னிறுத்தியே தமிழகத்தின் தலைவர்களின் அசைவுகள் இருந்தன. ஈழத்தில் செத்து மடியும் தமிழனையும் மிஞ்சி நமக்கு தேவை ஆட்சிக்கைட்டில்தான் என்ற வாக்கில் நடந்துக்கொண்டனர் சில தமிழ் தலைவர்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்கு நிலவி வந்த அரசியல் வேற்றுமைகளை மறந்து தமிழீழம் மலர ஒன்று பட்டிருந்தால் ஈழப்போர் கசப்பான முடிவை எட்டியிருந்திருக்காது. தமிழினத்தின் மாண்பு ஒன்றே தன் நோக்கம் என்று போராடிய அந்த மாவிரனின் தலைமைத்துவத்திலும் கூட நம் தமிழர்கள் ஒன்று படாமால் பிரிந்துக்கிடந்தனர் என்பது வருந்தத்தக்க உண்மை. தமிழ் இனத்தின் அடிப்படை பலவீனமே துரோகத்தில் அடங்கி போய் விட்டதால்தான் ஈழப்போர் கசப்பான ஓர் இடைவெளியை எட்டியுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் புதிதான ஒன்றல்ல, கட்டபொம்மனை காட்டி கொடுத்ததும் எட்டப்பன் என்ற ஒரு தமிழன்தான்; பிராபாகரனை காட்டிக்கொடுத்தும் தமிழர்கள்தாம். துரோகத்தை தமிழினம் வெல்லும் நாளில்தான் தமிழினம் ஒன்று பட முடியும்.

வருங்காலத்தில் தமிழினத்தின் ஒற்றுமைக்கு அடிப்படையாக அமையப்போவதும் ஈழப்போராக அமையும் பச்சத்தில் தமிழர்கள் தங்களிடேயே நிலவும் சின்ன, சின்ன வேற்றுமைகளைக் கூட புறந்தள்ளிவிட்டு ஒரே குரலில் ஈழத்தின் விடுதலையை வென்றெடுக்க வேண்டும். மலேசியாவிலும் ஈழத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட நிலைகளில் தமிழர்கள் ஒன்றிணைந்தனர் என்பது இங்கெ குறிப்பிடத்தக்கது.

மலேசியா தமிழர்கள் என்று பார்க்கையில், கடந்த 150 வருடங்களுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள், தங்களின் கலாசார, பாரம்பரிய பின்னணிகளோடு இங்கேயே தங்கி விட்டிருந்தனர். இந்த நாட்டின் வளர்ச்சியில் அபரிதமான பங்காற்றி, நாட்டின் மிகப்பெரிய இனமாகவும் தமிழர்கள் இருந்து வந்துள்ளனர். மலேசியாவை பொறுத்தவரை தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் பின்தள்ளப்பட்டனர். தமிழர்களின் ஒற்றுமையை பல்வேறு நிலைகளிலும் இந்த நாடு கண்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் இருந்த பொழுது கூட தமிழர்களின் எழுச்சி பல்வேறு கட்டங்களை தாண்டி வந்துள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையை ஒரு கண்ணாடி கோட்டையோடு ஒப்பிடலாம். ஒரு சிறு கல் பட்டாலும் கண்ணாடி கோட்டை சிதறி விடுவதைப்போல் மலேசிய தமிழர்களின் ஒற்றுமையும் கடந்த பல ஆண்டுகளில் சிறு, சிறு விடயங்களுக்கவேல்லாம் சிதறியுள்ளது. மலேசிய தமிழர்களின் ஒற்றுமையின்மையை ஒரு குறிப்பிட்ட தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்நாட்டில் ஏகபோக கோலேச்சி வந்தது. தமிழர்களின் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களின் உரிமைகள் மிக எளிதில் ஏப்பம் விடப்பட்டன. உரிமைகளை இழந்த தமிழினத்தின் முதுகில் ஏறி காலத்திற்கும் குதிரை சவாரி செய்யலாம் என்றிருந்த ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் மனக்கோட்டையை நவம்பர் 25 பேரணியின் மூலம் உடைத்தெறிந்தனர் மலேசிய தமிழர்கள். அந்த ஒற்றுமையாவது நீடித்ததா என்றால், கடந்த ஓராண்டில் நம் சந்தித்த பிளவுகள் எத்தனை. 7 சதவீத தமிழர்களுக்கு இந்த நாட்டின் எட்டு கட்சிகள். நமது இனத்தின் தலையெழுத்து எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை. ஒற்றுமை என்பதை அடைய நமக்கு ஏன் இத்தனை கடினம்? கடினத்திற்கு காரணம்தான் என்ன?

தமிழீழத்தில் இன்றும் எண்ணற்ற சகோதரர்கள் சொல்ல முடியாத வேதனைகளில் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர். பிரபாகரன் என்ற அந்த மாபெரும் தலைவன், ஒற்றுமையை வற்புறுத்தி தமிழர்களை ஏற்றுக்கொள்ள செய்தார். அந்த ஒற்றுமை இருந்த வரை தமிழர் படை எண்ணற்ற வெற்றிகளை குவித்தது. துரோகம் தலைத்துக்கியதால், ஒற்றுமையும் சிதைந்து, போர் கசப்பான கட்டத்தை எட்டி விட்டது. ஆனால் அது முடிவு அல்ல. தமிழர் ஒற்றுமையாக இருந்து ஈழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வரும்பொழுது எந்தவொரு பிணக்கமும் இல்லாமல் ஒன்றிணைத்து நமது ஈழத்து சகோதரர்களின் இன்னலை தீர்ப்போம்.

பேராசிரியர் இராமசாமி,

பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

Thursday, September 3, 2009

புலியைப் பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை!!

பினாங்கு, கம்போங் புவா பாலா, வீடுகள் உடைப்பட்டப்போது இராமசாமி எங்கே போய்விட்டார் என்று நேற்று பத்திரிகைகளில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். பினாங்கின் புலி என்று பேராசிரியர் கூறிக்கொள்கிறார் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஒரு திருத்தம், நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், பேராசிரியர் புலிதான்; அவர் பினாங்கில் மட்டும் புலியல்ல, மலேசியாவிற்கே புலிதான். அவர் காகித புலியல்ல; காரிய புலி!! இன்று புவா பாலா கிராம மக்களுக்கு, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்புள்ளஇரட்டை மாடி வீடுகள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே இழப்பீடாக கிடைக்கின்றது என்றால் அதற்கு காரணம் பேராசிரியர் இராமசாமிதான். எத்தனையோ இந்தியர் பெரும்பான்மை கிராமங்கள் மேம்பாட்டுக்காக எடுத்தக்கொள்ளப்பட்ட பொழுது, வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியவர்கள் யாரென்று ஆதாரத்தோடு எங்களால் நிருபிக்க முடியும். அப்படி நாங்கள் நிருபிக்கையில் தெரியும், 30 வருடங்களாக யார் வெற்று வாக்குறுதிகளின் வேந்தனாக இருந்தது, காகித புலியாக பறந்தது என்று.

தானேத் தலைவன், தானைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த ஓரு
மனிதருக்கு அடுத்து, இப்பொழுது இந்தியர்களின் நம்பிக்கை நட்சித்தரமாக பேராசிரியர் உருவாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலம்புகிறார்கள் இந்த அடிவருடிகள்.

கம்போங் புவா பாலா பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல அறிக்கை விடுத்திருக்கும் மோகன், மலிவான விளம்பரம் தேடி அலைகின்றார் என்பது அவரின் அண்மைய
நடவடிக்கைகளுக்கும், அறிக்கைகளுமே புலப்படுத்துகின்றன. பினாங்கு மாநில அரசு தலையிட்டதால், கம்போங் புவா பாலா பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணும் நிலை ஏற்பட்டது; தலையும் தெரியாமல், வாலும் தெரியமால் கம்போங் புவா பாலா விவகாரத்தில் மூக்கை நுழைத்து, அனைவரையும் குழப்பி மலிவு விளம்பரம் தேடியது இந்த மோகனும், அவரின் நண்பர்களும்தான். மலேசியாவில் எங்காவது, நிலம் பறிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகள் இழப்பீடாக தரப்பட்டுள்ளதா? தங்களது குடியிருப்பை மாற்றி செல்வதற்கு 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு முன்பு எத்தனையோ நில திட்டங்களுக்கு பல கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, எத்தனையோ இந்திய குடும்பங்கள் இது போன்ற திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; எப்பொழுதாவது மஇகாவோ அதன் தலைவரோ இதுப்போன்ற ஒரு இழப்பிட்டை பெற்றுத் தந்துள்ளனரா? கம்போங் புவா பாலா மக்களுக்கு, அவர்கள் வாழ்ந்த நிலத்திலேயே, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்பில், இரட்டை மாடி வீடுகள் கட்டித்தருவதற்கு மேம்பாட்டு நிறுவனத்தை ஒப்புதல் தர செய்தவர் பேராசிரியர் இராமசாமிதான்; சாமிவேலுவோ, இந்த மோகனோ அல்ல. கிராமத்தை விட்டு வெளியேறும் அம்மக்களுக்கு, 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகையாக மேம்பாட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்து, வாங்கி தந்தவரும் பேராசிரியர்தான்; இப்பொழுதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த 12 குடும்பங்களுக்கு மாத வாடகை பெற்று தருவதற்கு தொடர் முயற்சிகள் எடுத்து வருவதும் பேராசிரியர் அவர்கள்தான். கம்போங் புவா பாலா விவகாரத்தில் அனைத்தும் தெரிந்தவர் போல் முக்கை நுழைத்து குழப்பம் ஏற்படுத்தியதுதான் மோகனின் சாதனை; அந்த குழப்பத்தின் வழி, மலிவான விளம்பரம் தேடுவதுதான் மோகன் போன்றவர்களின் வாடிக்கை என்று அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தால் புரிகிறது.
நேற்று கம்போங் புவா பாலா கிராமத்தில் வீடுகள் உடைபடும்போது பேராசிரியர் இராமசாமி அங்கு வரவில்லை; அவர் கைப்பேசியை அடைத்து விட்டார் என்றெல்லாம் பிதற்றியிருக்கிறார் மோகன். நேற்று உடைக்கப்பட்டது மேம்பாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் வீடுகள். அவர்கள், தாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என்று தாமாகவே மேம்பாட்டு நிறுவனத்தினரிடம் சாவியை, ஒப்புதலை வழங்கி விட்டனர். அந்த குடியிருப்பாளர்களின் வீட்டை உடைக்க மேம்பாட்டாளர் உள்ளே சென்றார்; அப்பொழுது கிராமவாசிகளே அந்த மேம்பாட்டு நிறுவனத்தினரை உள்ளே அனுமதித்து விட்டபிறகும், தேவையில்லாமல் அங்கே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது மோகனின் கூட்ட்டத்தினர்தான் என்பதை நேரில் கண்டவர்களே சொல்கிறார்கள். மேலும் மோகன், நேற்று காலை பேராசிரியர் தனது கைப்பேசியை அடைத்து விட்டார் என்று மோகன் கூறியிருப்பது பச்சை பொய், இந்த ஒரு பொய்யே மோகனின் கற்பனை வளத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் பேராசிரியர் அவர்களின் கைப்பேசி இயக்க நிலையிலேயே இருக்கும். தான் மலிவு விளம்பரம் தேட வேண்டும் என்பதற்கு, மற்றவர்கள் பற்றி பொய்களை கூறுவதை மோகன் நிறுத்திக் கொள்வது நல்லது.

நேற்று கம்போங் புவா பாலாவில் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நிகழ்ந்திருக்காது, தேவையில்லாமல் அங்கே குழப்ப நிலையை ஏற்படுத்தி ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது மோகனின் படையினர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. அங்கே வந்திருந்த பத்திரிகை நிருபர்களையும் உள்ளே விடாமால் தடுத்து, போலீசாரோடு மோதியது எல்லாமே யார் என்பது எங்களுக்கும் தெரியும். சாலையில் படுத்துக்கொண்டு எங்கள் வீடுகளை உடைக்காதே என்று கேலிக்கூத்து நடத்தியது ஒன்றும் கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் அல்ல; அவர்கள் யார் என்பதை நான் சொல்லித்தான் மோகனுக்கு தெரிய வேண்டுமா? வேண்டுமென்றால் அங்கு குழுமியிருந்த பத்திரிகை நண்பர்களை கேட்டு பார்க்கலாம்.
பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டுவது என்பதை நிருபிக்கும் வண்ணமாக உள்ளது மோகன் தலைமையிலான மஇகா இளையோரின் நடவடிக்கை. கம்போங் புவா பாலா நிலத்தை விற்று அந்த மக்களை நட்டாற்றில் விட்டது மஇகா பங்கு வகித்த முன்னாள் தேசிய முன்னணி அரசுதான். அப்பொழுது ஆட்சிக்குழுவில் அமர்த்திருந்த டத்தோ சுப்பையாவை முதலில் கேள்வி கேளுங்கள்; இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த நில விற்பனையை தடுக்க முயற்சிக்கவில்லை? அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று பாசமழை பொழிவதால், மக்கள் உங்கள் மலிவு விளம்பர நாடகத்தை நம்ப மாட்டார்கள். நேற்று முன்தினம் கம்போங் புவா பாலாவில், மக்களுக்கு ஆதரவாக 200 பேரை அழைத்து வந்ததாக கூறியுள்ளார். அவர் அழைத்து வந்தவர்கள், ஆதரவளிப்பதர்க்கா? அல்லது எதற்கு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
மக்கள் கூட்டணி தலைவர்களை பற்றி ஏதேதோ வாய்க்கு வந்ததையெல்லாம் கூறியிருக்கும் மோகன் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை மக்கள் அறிவார்கள். பதில் கூற வேண்டிய கேள்விகள் எத்தனையோ உள்ளன, முதலில் அதற்கு பதில் கூறுங்கள், பிறகு எங்கள் மக்கள் கூட்டணி தலைவர்களைப் பற்றி பேசலாம். எங்கள் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளின் அரசியல், கொள்கையை அடிப்படையாக கொண்டது; கொள்ளையையும், பணத்தையும் அடிப்படையாக கொண்ட அரசியல் யார் அரசியல் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஏழை சமுதாயத்தின் வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்த பணத்திற்கு முதலில் பதில் கூறுங்கள் பிறகு கேள்விகள் கேட்கலாம். புலியை பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை.